`செல்பி கூடாது’ - காவிரிப் பகுதிகளில் ஆய்வு செய்த கரூர் ஆட்சியர் எச்சரிக்கை! | Heavy water flow in cauvery river, warning given by Karur collector

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:07:39 (25/07/2018)

`செல்பி கூடாது’ - காவிரிப் பகுதிகளில் ஆய்வு செய்த கரூர் ஆட்சியர் எச்சரிக்கை!

``கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர் வந்துகொண்டிருப்பதால், கரையோரத்திலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.      

 காவிரி ஆற்றில் ஆய்வு செய்யும் ஆட்சியர்

மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு செல்லும் நீர்வழிப்பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் நொய்யல் அணைக்கட்டு, புஞ்சைபுகளுர் வடக்கு கட்டிப்பாளையம், நஞ்சைபுகளுர் மேற்கு தவுட்டுப்பாளையம் மற்றும் மாயனூர் கதவணைப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.


 ஆட்சியர்

தொடர்ந்து பேசிய அவர், ``காவிரி ஆற்றில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் 30,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அது படிப்படியாக அதிகரித்து 50,000 முதல் 60,000 கனஅடியாக உயரர்ந்துள்ளது. தொடர்ந்து 65,000 முதல் 70,000 கனஅடி வரை தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதால் அணைக்கு வரும் உபரி நீரான 72,000 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. நீர் வரும் பாதையில் பாசன நீர் போக ஜேடர்பாளையம் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் மாயனூர் கதவணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வரும் அளவைப் பொறுத்து கதவணையில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது மாயனூர் கதவணையில் 40,000 கனஅடியும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாய்க்கால்களில் 1,000 கனஅடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுப் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 ஆட்சியர் ஆய்வு

கரையோரப் பகுதிகளுக்கு ஊராட்சிகள் மூலம் தண்டோரா, விழிப்பு உணர்வு பதாகைகள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாகவும், உள்ளுர் தொலைக்காட்சிகள் வாயிலாகவும் தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, காவிரி ஆற்றுக் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும், தங்களது குழந்தைகளையும், கால்நடைகளையும் அதிக கவனத்துடன் கண்காணித்துப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது. ஆற்றுக்கரைகளில் நின்று செல்பி புகைப்படம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் தகவல்களை கேட்டு அறிந்துகொள்ளலாம்" என்றார்.