``போராட்டத்தைத் தடுக்க நினைக்கிறார் அமைச்சர் வேலுமணி" - தி.மு.க எம்.எல்.ஏ புகார்! | Dmk Mla Karthi slams Minister Velumani

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:08:02 (25/07/2018)

``போராட்டத்தைத் தடுக்க நினைக்கிறார் அமைச்சர் வேலுமணி" - தி.மு.க எம்.எல்.ஏ புகார்!

தண்ணீரைத் தனியாருக்கு தாரை வார்த்தது தொடர்பாக, கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சி செய்வதாக, தி.மு.க எம்.எல்.ஏ கார்த்தி கூறியுள்ளார்.

தி.மு.க எம்.எல்.ஏ கார்த்தி

கோவை, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான கார்த்திக்,  கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள மோசமான சாலைகள் உள்ளிட்ட பொதுமக்களின்  அடிப்படை பிரச்னைகள் தொடர்பாகக் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி, ``தமிழக அரசு சொத்துவரியையும், வாடகை வரியையும் உயர்த்தியுள்ளதாக அரசாணை பிறப்பித்துள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற, கோவை மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். கோவை மாநகராட்சியில், எந்தவொரு அரசியல் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும், அவர்களது நிதியிலிருந்து சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டால், அந்த ஒப்பந்ததாரர்கள் ஓர் ஆண்டு மட்டுமே பராமரிப்புப் பணியை மேற்கொள்வார்கள். அப்படி ஓர் ஆண்டுக்குப் பிறகு மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட இந்த சோலார் மின் விளக்குகள் பல இடங்களில் மக்களுக்குப் பயனின்றி உள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்.  மாநகராட்சிக்குச் சொந்தமான 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஒரு லட்சம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளது. சாக்கடைகள் தூர்வாரப்படுவதில்லை. இதனால், கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக உள்ளது. இந்தப் பிரச்னைகள் தொடர்பாக வார்டு வாரியாக குறிப்பிட்டு மாநகராட்சி ஆணையாளரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், மக்களைத் திரட்டி தி.மு.க சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

தி.மு.க எம்.எல்.ஏ கார்த்தி

கோவை மாநகராட்சியின் குடிநீர் பராமரிப்பு மற்றும் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக, பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துக்கு 26 ஆண்டுகாலம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இப்போதும்கூட மாநகராட்சிப் பகுதியில் 10, 15 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சரின் தூண்டுதலின் பேரில்தான் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளனர். ஏற்கெனவே தி.மு.க ஆட்சியில் இந்தத் திட்ட வரையறை தயாரிக்கப்பட்டு, நிதிக்காக மத்திய அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், இவர்கள் அதைத் தனியாருக்கு வழங்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தி.மு.க தோழமைக் கட்சிகளுடன் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.  மக்கள் பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோம். காவல்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் அனுமதி மறுக்கப்படுகின்றது. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், அவதூறாக அறிக்கை வெளியிட்டது மட்டுமன்றி வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை.  மக்களுக்காக நடைபெறும் இந்தப் போராட்டத்தை நசுக்க, உள்ளாட்சித் துறை அமைச்சரும், அ.தி.மு.க-வினரும் மிரட்டிப் பார்க்கின்றனர். திட்டமிட்டபடி இந்தப் போராட்டம் நடைபெறும். சூயஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.