``காவிரி நீர் பாய இன்னும் பல வாய்க்கால்களையும் சுத்தப்படுத்துவோம்!" - கல்லூரி மாணவர்கள் உறுதி | We can make clean more channels for cauvery, says students

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (25/07/2018)

கடைசி தொடர்பு:08:11 (25/07/2018)

``காவிரி நீர் பாய இன்னும் பல வாய்க்கால்களையும் சுத்தப்படுத்துவோம்!" - கல்லூரி மாணவர்கள் உறுதி

வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள்

``காவிரி நீர் சீராக போகும் அளவுக்கு இன்னும் எத்தனை வாய்க்கால்களை வேண்டுமானாலும் சுத்தப்படுத்தத் தயார்!" என்று கரூர் மாவட்ட கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்கள். குளித்தலை அருகே உள்ள தென்கரை வாய்க்காலில் 6 கிலோமீட்டர் வரை குப்பைகளை அகற்றியபின் அவர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.

 தென்கரை வாய்க்காலானது கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து பிரிந்து, குளித்தலை நகராட்சி வழியாக திருச்சி மாவட்டத்திலுள்ள தூய்மை பணிபெட்டவாய்த்தலை வரை செல்கிறது. இந்தத் தென்கரை வாய்க்காலில் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட சுங்கவாயில் தொடங்கி ராஜேந்திரம் ஊராட்சியில் உள்ள பட்டவர்த்தி வரை ஆறு கிலோமீட்டர் தூரத்துக்குக் குப்பைகள் சூழ்ந்து காணப்பட்டது. இதை அகற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் தொடர் கோரிக்கையை முன்வைத்தனர். இதனால், குளித்தலைக் கட்டடப் பொறியாளர் சங்கம் தென்கரை வாய்க்காலில் மேற்குறிப்பிட்ட 6 கிலோமீட்டர் தூரத்துக்குப் குப்பைகளை அகற்ற அழைப்பு விடுத்தது. 

அதைத் தொடர்ந்து, அவர்களோடு சேர்ந்து குப்பைகளை அகற்ற கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கைகோத்தபடி களத்தில் குதித்தனர். இதைதவிர்த்து ஆறு பொக்லைன்களும் பயன்படுத்தப்பட்டது. ஆறு கிலோமீட்டர் தூரத்திலும் 6 லாரி குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவற்றைக் குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தூய்மை பணி

அதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய கல்லூரி மாணவர்கள், ``கடந்த சில வருடங்களாகக் காவிரியில் சரியாகத் தண்ணீர் வராததால், இந்த வாய்க்காலில் தண்ணீர் போகலை. அதனால், குப்பைகள் அதிகமாகக் கொட்டப்பட்டு, வாய்க்கால் பல இடங்களில் மூடப்பட்டதுபோல் ஆனது. இந்த வருடம் காலத்தோடு காவிரியில் தண்ணீர் வந்ததாலும், இந்த வாய்க்காலில் சரியாக தண்ணீர் போகாத சூழல் இருந்தது. அதனால்தான், குளித்தலை கட்டடப் பொறியாளர்கள் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த வாய்க்காலைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து சுத்தப்படுத்தினோம். தேவைப்படும் இடங்களில் பொக்லைன்களை வைத்துத் தூர் வாரினோம். காவிரி நீர் பாயமுடியாத அளவுக்குக் குப்பைகள் சூழ்ந்து இருக்கும் இன்னும் எத்தனை வாய்க்கால்களை வேண்டுமானாலும் சுத்தப்படுத்தக் கல்லூரி மாணவர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்கள் மகிழ்ச்சியாக!