வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (25/07/2018)

கடைசி தொடர்பு:08:14 (25/07/2018)

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷகீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. மனநலம் குன்றியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் இங்குத் தங்கியிருந்து வழிபட்டு வந்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதையடுத்து தமிழகம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இங்கு சாதி, மதம், மொழி பாராது வந்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கு ஆண்டுதோறும் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
 
844-ம் ஆண்டு சந்தனக்கூட்டுக்கான மவுலீது எனும் புகழ்மாலை கடந்த சனிக்கிழமை மாலை துவங்கியது. இதன் தொடர்ச்சியாக சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நேற்று (24-07-2018) மாலை நடந்தது. இதற்கென ஏர்வாடி தைக்காவில் இருந்து யானை, குதிரைகள் முன் செல்ல இசை வாத்தியங்கள் முழங்க  ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. தர்காவை மூன்று முறை கொடி ரதம் சுற்றி வந்தது. இதையடுத்து  அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தர்கா நிர்வாக சபையினர் சந்தனக்கூடு கொடியை ஏற்றினர். 
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது.  இதையொட்டி அங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா ஹக்தர் பொது மகா சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.