வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (25/07/2018)

கடைசி தொடர்பு:08:34 (25/07/2018)

’கட்டாயக் கல்வி உரிமையைத் தராத தனியார் பள்ளிகளை மூட வேண்டும்’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

``தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்'' என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது. 

கட்டாய கல்வி தொடர்பான வழக்கில் தீர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜூ, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ``வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்த்து பயன்பெறுகின்றனர். ஆனால், இலவசக் கல்வி திட்டத்தின்கீழ் சேரும் குழந்தைகளிடமிருந்து அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வியில் சேர்க்க பெற்றோர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழைக் குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. கட்டணம் வசூலிப்பது இத்திட்டத்துக்கு எதிராக உள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். 

மேலும், இத்திட்டத்தில் பணக்காரர்கள், அரசுப் பணியில் இருப்பவர்கள் சிலர், தங்களது வருமானத்தைக் குறைவாக காட்டி  குழந்தைகளை சேர்க்கின்றனர். இதனால் ஏழைக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்துக்கு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது  என்பதைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷாபானு அமர்வு ``தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும், அந்தப் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். 6 முதல் 14 வயது வரை உள்ளவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க