வரதட்சணை கொடுக்காததால் காதலியைக் கைவிட்ட காதலன்!

'உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை காதலின் பெயரால் அடைந்துவிட்டு கல்யாணம் என்றதும் வரதட்சணைக் கேட்டு கைவிட்ட காதலனை கோவையில் வைத்து பாட்னா போலீஸார் கைது செய்துள்ளனர்.'

வரதட்சனை

 

பீகார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியைச் சேர்ந்தவர் பப்புகுமார். இவர், கோவையை அடுத்துள்ள சூலூர் விமானப்படை தளத்தில் தொழில்நுட்ப பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பீகாரில் தனது பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஓர் இளம்பெண்ணைக் காதலித்த பப்புகுமார் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக நம்பிக்கையளித்து நெருங்கிப் பழகிவந்துள்ளார்.

ஒரு கட்டத்துக்குமேல், பப்புகுமாரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி  வேண்டியுள்ளார். ஆனால், பப்புகுமாரோ தான் காதலித்தப் பெண் என்றுகூட பாராமல் அளவுக்கு அதிகமான வரதட்சணை கேட்டு அதைக் கொடுத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் குடும்பத்தால் பப்புகுமார் கேட்ட வரதட்சணையைக் கொடுக்க முடியவில்லை. ஆனால், அந்தப் பெண் பப்புகுமாரிடம் தன்னை ஒப்படைத்துவிட்டதால் அவரை எப்படியாவது திருமணம் செய்துகொண்டாக வேண்டும் என்று கடுமையாகப் போராடியுள்ளார்.

இந்நிலையில், பப்புகுமார் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டு பீகாரிலிருந்து சூலூருக்கு வந்துவிட்டார். ஏமாற்றப்பட்ட அந்த இளம்பெண், பப்புகுமார் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி 'பாலியல் வன்கொடுமை' செய்துவிட்டதாக பாட்னா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், 'பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை' உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பப்புகுமாரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் பிடிவாரண்டுடன் பாட்னா அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்வதிகுமாரி தலைமையில் 3 பேர் கொண்ட காவல்துறையினர் கோவைக்கு வந்தனர்.

சூலூரில் வைத்து பப்புகுமாரைக் கைது செய்த பாட்னா காவல்துறையினர், அவரை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 27-ம் தேதிக்குள் பப்புகுமாரை பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு  நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!