`எங்களுடைய குறி கல்லூரி மாணவிகள்தான்'- சிக்கிக்கொண்ட போதை ஊசி கும்பல் அதிர்ச்சி தகவல்

போதை ஊசி கும்பல்

கோவையில் கல்லூரி மாணவ- மாணவிகளை குறிவைத்து இயங்கி வரும் 'போதை ஊசி ஆசாமிகள்' தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவையில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்துக்குப் பயன்படுத்தும் பிரத்யேக மயக்க மருந்து தொடர்ச்சியாக திருடப்படுவதாகவும், ஒரு கும்பல் அதை போதை ஊசியாக மாற்றி கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விற்றுக் காசு பார்ப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டு சில மாதங்களாகவே பரபரக்கிறது. இந்த பகீர் குற்றச்சாட்டால் கோவையில் உள்ள கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் பதற்றத்தில் துடித்தார்கள். (இது தொடர்பாக 2.5.2018 தேதியிட்ட ஜூ.வி இதழில், 'மிரட்டும் போதை பயங்கரம்' என்ற தலைப்பில் விரிவாக எழுதியிருந்தோம்.)

இந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம்  போதை ஊசி ஆசாமிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். எங்களைப் போலவே இன்னும் பல கும்பல் கோவையில் உலாவுவதாக கைதானவர்கள் சொல்ல அதிர்ந்தது போலீஸ். இந்தப் போதை ஊசி விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த, கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா. இதில் தனிக்கவனம் செலுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை நடத்திவந்த  நிலையில், நேற்று கோவை காந்திபுரத்தில்  போதை ஊசிக் கும்பல் உலாவுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காந்திபுரம்  பேருந்து நிலையத்தில் வைத்து பெங்களூருவைச் சேர்ந்த ஜாய் இம்மானுவேல், கோவையைச் சேர்ந்த அனாஸ், ஜூல்பிகர்அலி, முகமது சிஹாப்  ஆகிய நான்கு போதை ஊசி ஆசாமிகளை கையும் களவுமாக கோவை காட்டூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ``அந்த குறிப்பிட்ட மருந்தை பெங்களூருவிலிருந்து குறைவான விலைக்கு வாங்கி வந்து போதை ஊசியாக மாற்றி கல்லூரி மாணவ- மாணவிகளை குறிவைத்து அவர்களிடம் விற்பதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து நான்குபேரையும்  இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆகஸ்ட்  7-ம் தேதி வரை நான்குபேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!