குற்றாலம் அருவியில் தாராளமாய் கொட்டும் தண்ணீர்.. ஏராளமாய் குவியும் பயணிகள்!

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

குற்றாலம் அருவி

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இந்த ஆண்டு சீசன் அமோகமாக உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை இல்லாத போதிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் அதிகம் விழுவதுடன், குளிர்ந்த சீதோஷ்ணநிலை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதனால் வரிசையில் காத்திருந்துக் குளிக்கும் நிலைமை உள்ளது.

பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அமோகமாக கொட்டுகிறது. அங்கு கூட்டம் குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள். ஐந்தருவியின் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இது தவிர, குற்றாலத்தின் அருகில் உள்ள குண்டாறு அணை நிரம்பி வழிவதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிகிறார்கள். அணையில் இருந்து தண்ணீர் மருகால் பாயும் இடத்தில் குளிப்பதுடன், அருகில் உள்ள நெய்யருவியிலும் கூட்டம் அலைமோதுகிறது.

செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2 செ.மீ மழை பதிவாகி இருப்பதால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மட்டும் அல்லாமல், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வனத்துறையினரிடம் அனுமதி பெற்று அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குளித்துவிட்டுத் திரும்புகிறார்கள். பாபநாசம் அகத்தியர் அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது.

இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தொடர்ந்து சிறப்பாக இருப்பதால், அருவிகளுக்கு அருகில் தற்காலிகக் கடைகளை அமைத்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் 28-ம் தேதி குற்றாலத்தில் தமிழக அரசின் சார்பாக சாரல் திருவிழா நடக்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரம் நடைபெறும் சாரல் திருவிழாவில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால் அதை சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்லாமல் உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!