ஸ்டெதஸ்கோப் மாட்டிவிட்ட ஆட்சியர்... ஆதிவாசி மாணவியின் நிறைவேறிய கனவு! | Tiruvannamalai Collector helps Javadhu Hills girl to study MBBS

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (25/07/2018)

கடைசி தொடர்பு:11:46 (25/07/2018)

ஸ்டெதஸ்கோப் மாட்டிவிட்ட ஆட்சியர்... ஆதிவாசி மாணவியின் நிறைவேறிய கனவு!

ஆட்சியர் எடுத்த நடவடிக்கை காரணமாக ஜவ்வாது மலை மாணவியின் டாக்டர் கனவு நனவாகியுள்ளது.

ஸ்டெதஸ்கோப் மாட்டிவிட்ட ஆட்சியர்... ஆதிவாசி மாணவியின் நிறைவேறிய கனவு!

கேரளத்தில் தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ளது அட்டப்பாடி பகுதி. கேரளாவிலேயே மிகவும் பின்தங்கிய பகுதி இது. இருளர், முதுகா போன்ற மக்கள் வாழும் பூமி. காடும் காடு சார்ந்த வாழ்க்கையை வாழும் இருளர் சமூகத்திலிருந்து பள்ளிப்படிப்பை முடிப்பவர்களைப் பார்ப்பதே அரிது. பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால், பல கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்க வேண்டும். பாம்புக்கடியால் இறப்பவர்களே இங்கு அதிகம். திடீர் திடீரென யாரையாவது தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். கேட்டால்... `பாம்பு கடித்துவிட்டது' என்பார்கள். இந்த மக்களின் வாழ்வு, கடினம் நிறைந்தது.

ஆட்சியருடன்ஆதிவாசி மாணவி  சுமத்ரா

இதையெல்லாம் சிறுவயதிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்த துளசி என்கிற சிறுமிக்கு, டாக்டர் ஆவதே லட்சியம். நினைத்ததுபோல டாக்டராகவும் மாறினார். இருளர் சமூகத்திலிருந்து உருவான முதல் டாக்டர் துளசிதான். இருளில் கிடக்கும் இருளர்களுக்கு வெளிச்சம் தந்தது மட்டுமல்லாமல், பல ஆதிவாசிப் பெண்களுக்கு ரோல்மாடலும் ஆகியுள்ளார். 12-ம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்த துளசி, தற்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவருகிறார். எம்.எஸ் படிப்பது துளசியின் அடுத்த இலக்கு. 

அட்டப்பாடியில் மது என்கிற இளைஞர் கொல்லப்பட்டபோது, துளசியிடம் பேசினோம். ``எங்கள் மக்களை விலங்குகள் மாதிரிதானே மற்றவர்கள் நடத்துகிறார்கள். ஆதிவாசி மக்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? என்னைப் போன்று பலரும் படித்து, காட்டைவிட்டு நாட்டுக்குள் வர வேண்டும். என்னைப் பார்த்து ஓர் ஆதிவாசிப் பெண்ணாவது டாக்டராக மாறினால், அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி'' என்று ஆதங்கத்தைக் கொட்டினார். துளசியின் வார்த்தைகள் தற்போது உண்மையாகியுள்ளன. 

துளசி வழியில் மற்றோர் ஆதிவாசிப் பெண்ணும் மருத்துவப் படிப்பில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் ஜவ்வாது மலையிலிருந்து ஸ்டெதஸ்கோப் அணியப்போகிறார். பட்டன்கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதான சுமத்ராவுக்கும் சிறு வயது முதலே டாக்டராவதுதான் லட்சியம். ப்ளஸ் டூ தேர்வில் 973 மதிப்பெண் பெற்றிருந்தார். நீட் தேர்வில் 135 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றார். சிதம்பரத்தில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. மேனேஜ்மென்ட் கோட்டா என்பதால், பல லட்சம் ரூபாய் செலவாகும். சுமத்ராவின் குடும்பத்தாரால் லட்சக்கணக்கில் பணம் செலவுசெய்து படிக்கவைப்பது என்பது நடக்காத காரியம். 

ஆதிவாசி மாணவி சுமத்ரா

சுமத்ரா குறித்த தகவல், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை எட்டியது. ஆட்சியருக்கு ஒரே ஆச்சர்யம். `ஜவ்வாது மலை மாணவி நீட் தேர்வில்  வெற்றிபெற்றிருக்கிறாரா!' என்று வியந்துபோனார். மாணவிக்குத் தேவையான உதவிகளைச் செய்ய, உடனடியாகக் களத்தில் இறங்கினார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தரப்பில் நிதி உதவி செய்யப்பட்டதோடு, மாவட்ட ஆட்சியரே சில ஸ்பான்சர்களை ஏற்பாடு செய்தார். முதல்கட்டமாக மாணவி சுமத்ராவின் படிப்புக்கு 17 லட்சம் ரூபாய் நிதி சேர்ந்தது. மீதித் தொகைக்கு, ஸ்காலர்ஷிப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் முயற்சியால், ஆதிவாசி மாணவியின் டாக்டர் கனவு நிறைவேறியது. கல்லூரியில் சேர்வதற்கு முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமத்ராவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. ஆட்சியர் கந்தசாமி, மாணவிக்கு வெள்ளை கோட் அணிவித்து கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிவிட்டார். அப்போது, மாணவி சுமத்ராவின் கண்களில் நீர் திரண்டது. மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த சுமத்ரா, ``ஜவ்வாது மலையிலேயே மருத்துவராகப் பணிபுரிவேன்'' என்று உறுதியளித்துள்ளார்.

சுமத்ராவின் தந்தை மாணிக்கம், ``ஆண்டுக்கு 4.5 லட்சம் ரூபாய் கட்டணம் என்றார்கள். அதைக் கேட்டதும் அதிர்ந்துபோனாம். மாவட்ட ஆட்சியர்தான் தக்க நடவடிக்கை எடுத்து என் மகள் டாக்டராக உதவியுள்ளார். அவருக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?'' என்று நெகிந்தார். 

ஜவ்வாது மலை டாக்டருக்கும், தக்க நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கும் வாழ்த்துகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close