முதன் முறையாக ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! வீட்டில் இருந்தபடியே பங்கேற்கலாம் | anna university general counselling started today

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (25/07/2018)

கடைசி தொடர்பு:13:14 (25/07/2018)

முதன் முறையாக ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! வீட்டில் இருந்தபடியே பங்கேற்கலாம்

பொதுப் பிரிவினர்களுக்கான ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்கியது. 5 சுற்றுகளாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மொத்தம் 1,06,105 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். 

பொறியியல் கலந்தாய்வு

தமிழகத்தில் உள்ள 562 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையை, கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்பி வருகிறது. மொத்தம் உள்ள 2.6 லட்சம் பொறியியல் காலி இடங்களில் 1.9 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. இந்த வருடம் முதல், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முன்னதாக, கடந்த 21-ம் தேதியில் தொடங்கிய சிறப்புப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நேற்றுடன் (24-7-2018) நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்ற 10,000 மாணவர்களில் 8,000 பேர் முன்தொகை செலுத்தி உள்ளனர். 

இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று (25-07-2018) தொடங்கியது. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில், 200-க்கு 190 வரை கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கு, வரும் 27-ம் தேதி மாலை வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளை 30-ம் தேதியில் இறுதியாக உறுதி செய்துகொள்ளலாம். முதல் முறையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுவதால் மாணவர்களுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணினி வசதி இல்லாத மாணவர்கள் உதவி மையங்களுக்குச் சென்றும், கணினி வசதி இருப்பவர்கள் வீட்டில் இருந்தபடி கலந்தாய்வில் பங்கேற்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.