வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (25/07/2018)

கடைசி தொடர்பு:13:10 (25/07/2018)

வேர்க்காடு சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் திரண்ட மும்மதத்தினர்!

ராமேஸ்வரம் தீவு மக்களின் பாதுகாவலராக போற்றப்படும் தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலய ஆடித்திருவிழா தேர்பவனி சிறப்புடன் நடைபெற்றது.

தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் தேர்பவனி

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். தீவு மக்களின் பாதுகாவலராக போற்றப்படும் சந்தியாகப்பர் ஆலயத்தில் மதங்களைக் கடந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் இந்தக் கோயிலின் வளாகத்திலேயே தங்கியிருந்து வழிபாடு செய்வதால் உடல் நலம் பெறும் என்ற வேண்டுதலையும் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நவ நாள்களின் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் தேர்ப்பவனி நேற்று இரவு நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித சந்தியாகப்பர், அன்னை மரியாள் உருவங்கள் வைக்கப்பட்டு கோயில் வளாகத்தைச் சுற்றி எடுத்து வரப்பட்டது. இந்த விழாவில் தீவுப் பகுதி மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மும்மதங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித சந்தியாகப்பருக்கு மெழுகுவத்தி ஏற்றி வழிபட்டனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக தென்னை மரக் கன்றுகளைக் கோயிலுக்கு காணிக்கையாக அளித்தனர். திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து தங்கச்சிமடத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சந்தியாகப்பர் ஆலயத்தின் 476-ம் ஆண்டு விழா நினைவாக சிறப்பு அஞ்சல் உறையை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் வெளியிட்டார். இன்று காலை திருவிழாவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் நடத்திய இந்தத் திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அதிகம் படித்தவை