``அப்பா படிக்கட்டுல படுத்திருக்கிறதை மறந்துடாதம்மா!” கலங்கும் நிருபர் ஷாலினியின் தந்தை | ''we lost her'' says reporter shalini father

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (25/07/2018)

கடைசி தொடர்பு:14:55 (25/07/2018)

``அப்பா படிக்கட்டுல படுத்திருக்கிறதை மறந்துடாதம்மா!” கலங்கும் நிருபர் ஷாலினியின் தந்தை

``அடுத்த வருஷம் பர்த்டேவை அப்பா, அம்மாவோடு சேர்ந்து செலிப்ரேட் பண்றோம். மிஸ் யூ டியர் ஷர்மி'னு சொன்னா. இப்படி ஒரேடியா மிஸ் பண்ணிட்டுப் போயிடுவான்னு நினைச்சுப் பார்க்கலை”

``அப்பா படிக்கட்டுல படுத்திருக்கிறதை மறந்துடாதம்மா!” கலங்கும் நிருபர் ஷாலினியின் தந்தை

ஷர்மிளாவோடு ஷாலினி

``ப்படி இருக்கீங்க?

இந்தக் கேள்வியை அவரிடம் கேட்பதற்கு முன்னால் 10 முறையாவது யோசித்து, தயங்கியவாறு கேட்டேன். இரண்டு நிமிடங்கள் அமைதியாகவே இருந்த ஷர்மிளா சட்டென இடிபோல கதறி அழ ஆரம்பித்துவிட்டார். கடந்த வாரம், சாலை விபத்தில் பலியான நிருபர் ஷாலினியின் சகோதரி. ஷாலினியின் இழப்பிலிருந்து இந்த நொடி வரை அந்தக் குடும்பம் மீளவில்லை எனப் புரிந்து, ஆறுதல் சொல்ல முடியாமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஷர்மிளாவின் தந்தை ராஜேந்திரன் பேசினார். 

``நல்லா இருக்கீயாப்பா. வெளியில போயிட்டு இப்போதான் வீட்டுக்குள்ளே வந்தேன். நீங்க போன் போட்டதா பாப்பா சொல்லுச்சு. ஷர்மிளாவையும் அவ அம்மாவையும் என்னால் சமாதானம் பண்ணவே முடியல கண்ணு. அழுதுட்டே கெடக்காங்க. அவ பேச்சை எடுத்ததும் எனக்கும் கை, கால் படபடப்பா இருக்கு. ஒரு நிமிசம் லைன்லயே இரு கண்ணு. ஒரு சொம்பு தண்ணி குடிச்சுக்கிறேன்” என்றவரின் குரலில், ஆசை மகளை இழந்த பரிதவிப்பு.

``என் குடும்பத்தின் குலவிளக்குய்யா ஷாலினி. வீட்டுக்குத் தேவையான ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து கவனிச்சுப்பா. அவள் அம்மாவுடன் சேர்ந்து வீட்டு வேலை எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்வா. படிச்சவ என்கிற மிதப்பே இருந்தது கிடையாது. சொந்த பந்தத்து மேலே உசுரா இருந்தவள். எந்த விசேஷம்னாலும் ஆளும் பேருமா சேர்ந்து நிற்க நினைப்பா. நான் மச்சான்கிட்ட சண்டை  போட்டுட்டு வீராப்பா இருந்தேன். `எதுக்குப்பா இப்படி முறுக்கிட்டுத் திரியணும். எல்லாமே கொஞ்ச நாளைக்குத்தான்ப்பா. இருக்கிற வரைக்கும் சொந்தக்காரங்களோடு சச்சரவு இல்லாம இருக்கலாமே'னு ஷாலினிதான் சொல்லிச்சு. நான் யார்கிட்டயாவது பேசாம இருந்தாலும், ஷாலினி அன்பாதான் பழகுவா. `நீ வேணா பேசாம இருப்பா. என்னால முடியாது'னு சொல்லிடுவா. அக்கம் பக்கத்திலும் சரி, சொந்தத்திலும் சரி, யார் மனசையும் நோகடிச்சதில்லே. மெட்ராஸுல எப்படின்னு மீடியாக்காரங்க உங்களுக்கே நல்லா தெரிஞ்சிருக்கும். அத்தனை பேரு மனசிலும் வாழ்ந்துட்டு இப்படிச் சட்டுன்னு போய்ச் சேந்துட்டாளேப்பா” என்றவர் குரல் உடைகிறது.

``அன்று என்ன நடந்தது? உங்களுக்கு எப்போது தகவல் கிடைத்தது?'' என்று கேட்டேன்.

``ஷர்மியும் ஷாலினியும் ரெட்டைப் புள்ளைக. ரெண்டு நிமிஷம் முன்ன பின்ன பொறந்தாங்க. வருஷா வருஷம் பிறந்தநாளைக்கு ரெண்டும் வீட்டுலதான் இருப்பாங்க. ஷாலினி வேலைக்குப் போன இந்த ரெண்டு வருஷமாத்தான் ரெண்டு பேரும் ஒண்ணா இல்லாம கொண்டாடிட்டு இருக்கோம். அன்னைக்குக் காலையில நானும் மனைவியும் புள்ளைக பேருல அர்ச்சனை செய்யறதுக்குக் கோயிலுக்குப் போயிருந்தோம். ஷாலினி போன் பண்ணி, `அப்பா இன்னையிலிருந்து நம்ம குடும்பத்துக்கு நல்ல நேரம் வந்துடுச்சுப்பா. புதுசா தொடங்குற சேனலில் கூடுதல் சம்பளத்துல வேலை கிடைச்சிருக்கு. நீ அம்மாக்கிட்ட அனுசரணையா நடந்துக்கோப்பா. நாம சீக்கிரமே முன்னேறிடுவோம்'னு சொன்னுச்சு. அந்த சந்தோஷம் நீடிக்கலை. சாயந்தரம் 6 மணி இருக்கும், `பாப்பாவுக்கு அடிபட்டுடுச்சு. ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போறோம்'னு தகவல் கொடுத்தாங்க. என் பொண்டாட்டி அலறித் துடிக்க ஆரம்பிச்சுட்டா. `நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகிடாது'னு தைரியம் சொல்லி தேத்திட்டு இருக்கும்போதே, `முடிஞ்சுருச்சு'னு தகவல் சொல்லிட்டாங்கய்யா. இந்தப் பாவிப் பயல தலையில இடியைத் தூக்கிப் போட்டுட்டாங்களே. இனி என் குலதெய்வத்தை எங்கன போய்த் தேடுவேன். தினமும் காலையில், `டியூட்டிக்குக் கிளம்பிட்டேன்ப்பா'னு போனில் சொல்லிட்டுத்தானே போவா. இனி, என் பொண்ணு குரலைக் கேட்காமல் எப்படிய்யா இருக்கப்போறேன். `அம்மாடி, அப்பா உன் ஹாஸ்டல் படிக்கட்டுலேயே படுத்திருக்கேன்னு நினைச்சுக்கோ. நீ வேலை முடிச்சுட்டு வந்ததும் போன் பண்ணி பேசு. அப்போதான் அப்பாவால நிம்மதியாத் தூங்கமுடியும்னு சொல்லியிருந்தேன். ஆனா, இப்படி ஒட்டுமொத்தமா என் தூக்கத்தைப் பறிச்சுட்டாளேய்யா” என வெடித்து அழுகிறார் ராஜேந்திரன்.

``எங்க பர்த்டேவுக்காகக் காலையிலதான் ஷாலினிக்கு வாட்ஸ்அப்ல வீடியோ அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு ரொம்ப அழுதிருக்கா. உடனே எனக்கு போன் பண்ணி `லவ் யூ டி. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். அடுத்த வருஷம் பர்த்டேவை அப்பா, அம்மாவோடு சேர்ந்து செலிப்ரேட் பண்றோம். மிஸ் யூ டியர் ஷர்மி'னு சொன்னா. இப்படி ஒரேடியா மிஸ் பண்ணிட்டுப் போயிடுவான்னு நினைச்சுப் பார்க்கலை. என்னால இதுக்கு மேலே பேச முடியலை. ப்ளீஸ் வெச்சிடறேன்” என்ற ஷர்மிளாவின் குரலில் வெளிப்பட்ட துயரத்தின் பாரம் நம் மனதிலும் ஏறுகிறது. 

சமூகத்தின் குரலாக ஒலித்த ஷாலினியின் இழப்பு, அவர் குடும்பத்துக்கானது மட்டுமல்ல; நம் ஒவ்வொருவருக்குமானது!


டிரெண்டிங் @ விகடன்