ஓடும் ரயிலில் 12 எல்.இ.டி டிவி-க்கள் திருட்டு! - காத்திருந்த உரிமையாளர் அதிர்ச்சி | railway parcels are opened and tv boxes are stolen from thirukkural express

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (25/07/2018)

கடைசி தொடர்பு:12:35 (25/07/2018)

ஓடும் ரயிலில் 12 எல்.இ.டி டிவி-க்கள் திருட்டு! - காத்திருந்த உரிமையாளர் அதிர்ச்சி

திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட பார்சலை உடைத்து 12 டிவி பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரயிலில் நூதன திருட்டு

நெல்லை சீனிவாசநகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அந்தப் பகுதியில் `வி வின்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்துக்காக டெல்லியில் உள்ள ஒரு கம்பெனியிடம் இருந்து 34 எல்.இ.டி டிவி பெட்டிகளுக்கு ஆர்டர் செய்திருந்தார். டெல்லியைச் சேர்ந்த அந்தக் கம்பெனியினர் 17 பெட்டிகளில் தலா 2 டிவிகளை வைத்து பார்சல் செய்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலின் சரக்குப் பெட்டியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு மகேஷுக்குத் தகவல் தெரிவித்தனர். 

டெல்லியிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) ரயில் இன்று காலை 8 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது மகேஷ் தனக்கு வந்துள்ள பார்சல்களை வாங்குவதற்காக வந்திருந்தார். ஆனால், அந்த பார்சல்களில் 6 பெட்டிகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 எல்.இ.டி டிவிக்கள் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருட்டுப் போன டி.வி பெட்டிகளின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய் என்பதால், இது பற்றி ரயில்வே நிர்வாகத்திடம் அவர் விளக்கம் கேட்டார். அதற்கு ரயில்வே நிர்வாகத்தின் தரப்பில் உரிய பதில் அளிக்காததால் அவர் ரயில்வே போலீஸில் புகார் செய்தார். ரயில்வே பாதுகாப்புப் படையினர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, இந்த ரயில் வரும் வழியிலேயே பார்சலை மர்ம நபர்கள் பிரித்து டிவி-க்களை திருடிச் சென்றது தெரியவந்தது. 

அதனால், வழியில் உள்ள ரயில் நிலையங்களில் இருக்கும் சிசிவிடி காட்சிகளைக் கொண்டு இந்த துணிகரத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர். அதனால், இது குறித்து அனைத்து ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி பேசிய மகேஷ், ``நான் பலமுறை இதுபோல டெல்லியிலிருந்து டிவி பெட்டிகளை வாங்கி இருக்கிறேன். அப்போதேல்லாம் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது நடந்துள்ள சம்பவத்தால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைவில் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து உதவ வேண்டும்’’ என்றார்.

டிவி திருட்டு

இந்தச் சம்பவம் பற்றி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியதால், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ரயில் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் பயணிகள் பெரும் அதிருப்திக்கு உள்ளானார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்த பின்னர் ரயில் இயக்கப்பட்டு குமரிக்கு புறப்பட்டுச் சென்றது. ஓடும் ரயிலில் நடந்த இந்தத் துணிகர திருட்டு ரயில்வே வட்டாரத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.