சென்னை பெண் இன்ஜினீயருக்கு விடுதியில் நேர்ந்த சோகம்!

பெண்

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய பெண் இன்ஜினீயருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த துயரச் சுவடு மறைவதற்குள் சென்னை செம்மஞ்சேரியில் பட்டப்பகலில் பெண் இன்ஜினீயர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த புகாரின் பேரில் காவலாளி சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கோவையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர், சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். செம்மஞ்சேரியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறார். நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர், மதியம் 3 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக அவர் கதவைத் திறந்து வைத்துள்ளார். அப்போது, விடுதியில் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருந்துள்ளது. அந்த விடுதியில் காவலாளியாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் பணியாற்றுகிறார். கதவைத் திறந்து வைத்து தூங்கிய பெண் இன்ஜினீயரின் அறைக்குள் சுபாஷ் உள்ளே நுழைந்துள்ளார். அப்போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் சுபாஷ். இதனால், பாதிக்கப்பட்ட பெண் இன்ஜினீயர் எங்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரித்து சுபாஷை கைது செய்துள்ளோம். பெண் இன்ஜினீயரின் எதிர்காலம் கருதி அவர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை" என்றனர். 

பட்டப்பகலில் பெண் இன்ஜினீயருக்கு நேர்ந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!