வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (25/07/2018)

கடைசி தொடர்பு:16:33 (25/07/2018)

4 வயது மகளை சித்ரவதை செய்த தந்தை! அதிரடி காட்டிய மாதர் சங்கத்தினர்

குடிபோதையில் பெற்ற மகளை தந்தை சித்ரவதை செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மாதர் சங்கத்தினர் அதிரடியாக களத்தில் இறங்கி காவல்துறையினர் உதவியுடன் சிறுமியை மீட்டுச் சென்றனர்.

சிறுமி சித்ரவதை

மதுரை பெத்தானியாபுரம் காமராஜர் முதல் தெருவில் சசி - கெளரி என்ற தம்பதி வசித்துவருகின்றனர். இவர்கள் ஊர்த் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் கச்சேரிகளுக்குச் சென்று பணி செய்துவந்துள்ளனர். ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அதிகப்படியாக இரவு நேரங்களில்தான் நடைபெறும் என்பதால் இருவரும் காலையில்தான் வீடு திரும்புவார்கள். இந்நிலையில், இவர்களுக்கு 4 வயதில் யோகா என்ற மகள் உள்ளார். யோகாவுக்கு அக்கம் பக்கத்தினர்தான் தேவையான உணவினை வழங்கி பார்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், யோகா வீட்டின் அருகில் வசிப்பவர் யோகா உடலில் இருந்த காயங்களைப் பார்த்து யோகாவிடம் கேட்டபோது, குடிபோதையில் இரவு நேரங்களில் தன் அப்பா, தன்னைக் கடித்து வைப்பதாகவும், ஊசியைக் கொண்டு குத்துவதாகவும், பெல்ட்டை வைத்து அடிப்பது, சிகரெட்டை வைத்து சூடு வைப்பதாகவும் கண்ணீருடன் கூறி உள்ளார். இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அகில இந்திய மாதர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் கரிமேடு காவல்துறையினர் மீட்டுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.