வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (25/07/2018)

கடைசி தொடர்பு:14:30 (25/07/2018)

`விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத்தில் மோசடி..!' அதிகாரிகளைச் சாடும் விவசாயி!

`விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத்தில் மோசடி..!' அதிகாரிகளைச் சாடும் விவசாயி!

கடந்த 2016-ம் ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. இதனால், விவசாய உற்பத்தியும், விளைச்சலும் பெரிதும் பாதிக்கப்பட்டதால் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறின. விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் மிக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு வறட்சி நிவாரண நிதியை வழங்கியது. அப்படி வழங்கப்பட்ட நிதியை திருச்சி மாவட்ட அதிகாரிகள், போலியான கணக்குகளைக் காட்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்து விட்டதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா எம்.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன், சுப்பிரமணியன் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து சுப்பிரணியன் கூறுகையில், ``முசிறி வருவாய்க் கோட்ட நிர்வாக எல்லைக்குட்பட்ட தா.பேட்டை மற்றும் முசிறி ஒன்றியத்தில் அடங்கிய கிராமங்கள் முழுவதுமே விவசாயம் சார்ந்த பகுதிகள்தாம். கடந்த 2016-17-ம் ஆண்டு தமிழகத்தில் நிலவிய கடுமையான வறட்சி காரணமாக எங்கள் பகுதி மிகவும் பாதிப்புக்குள்ளானது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்தது.

வறட்சி

அதன்படி, முசிறி தாலுகாவில் 64 கிராமங்களிலும், தொட்டியத்தில் 27 மற்றும் துறையூரில் 44 என மொத்தம் 135 கிராமங்களுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிதி முறையாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிதியை, வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து, அவர்களின் உறவினர்கள் பெயரில் போலியான பட்டியல் தயாரித்து, அந்த நிதியை வரவுவைத்து, பங்கு போட்டுக் கொண்டார்கள். குறிப்பாக, முசிறியில் அப்போது தாசில்தாராகப் பணியாற்றிய மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாகப் பேரூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய ரமேஷ் பெயரில் நிலமே இல்லை; ஆனால், அவர் தன் பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி, அதன் மூலம் வறட்சி நிவாரணப் பணத்தை எடுத்துள்ளார். இதேபோல், வட்டாட்சியர் மணிகண்டன், முசிறி வருவாய் ஆய்வாளர் முத்து, துணை வட்டாட்சியர் சுப்பிரமணி, பேரூர் ஆனந்த், மூவேலி, வெள்ளூர் வி.ஏ.ஓ லாவண்யா, சுக்காம்பட்டி வி.ஏ.ஓ துரைக்கண்ணன், செவந்திலிங்கபுரம் வி.ஏ.ஓ பிரியா, தண்டலைப்புத்தூர் வி.ஏ.ஓ ரமேஷ்  உள்ளிட்ட அதிகாரிகளும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

முசிறி தாலுகாவுக்கு அரசு வழங்கிய வறட்சி நிவாரணத் தொகை சுமார் 4 கோடி ரூபாய். இந்த தாலுகாவுக்கு உட்பட்ட ஆறு பஞ்சாயத்துகளில் கிராம நிர்வாக அதிகாரிகள் போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவர்களின் உறவினர்கள் பெயரில் குத்தகை நிலம் இருப்பதாகத் தெரிவித்து, கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, உறவினர்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளனர். அதில் பலர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். முறைகேடாக வறட்சி நிவாரணத் தொகையைக் கொள்ளையடித்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை ஏற்கெனவே கொடுத்திருக்கிறேன். இந்த முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாக விசாரித்தால் திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வறட்சி நிவாரண முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும்" என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள், ``சுப்பிரமணியன் வழங்கியுள்ள புகாரில் அதிகாரிகள் பணியாற்றிய இடங்கள் மற்றும் பெயர்கள் நிறைய இடங்களில் தவறாக உள்ளன. குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்