ஃபேஸ்புக் மூலம் பெண்களுக்கு காதல் வலை! - போலி ஐ.பி.எஸ். அதிகாரி சிக்கிய பின்னணி

போலி ஐபிஎஸ் அதிகாரி மணிகண்டன்

சென்னையில் பி.டெக் படித்துவிட்டு போலி ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து பெண்களை ஏமாற்றிய மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கானத்தூர் இந்திராநகர் பகுதியில் சைரன் வைத்த காரில் பந்தாவாக ஒருவர் வலம் வந்தார். சந்தேகமடைந்த பொதுமக்கள், கார் குறித்து கானத்தூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில்  போலீஸார், அந்தக் காரை மடக்கினர். பிறகு காரில் இருந்தவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் கௌதமன் ஆகியோர் நீண்ட நேரம் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சைரன் வைத்த காரில் சென்றவர் மணிகண்டன். இவரின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு. இவர், சென்னை அயனாவரத்தில் குடியிருந்துள்ளார். பி.டெக் படித்துள்ள இவர், வேலை எதுவும் செய்யாமல் ஊரைச் சுற்றிவந்துள்ளார். ஆடம்பரமாக வாழ தன்னை ஐ.பி.எஸ். அதிகாரி என்று சொல்லியதோடு, சைரன் வைத்த காரில் வலம் வந்துள்ளார். காரில் போலீஸ் என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி வைத்துள்ளார். அவர், ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது. மணிகண்டனிடம் முழுமையாக விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கைதான மணிகண்டனிடம் விசாரித்தபோது நடிகர் வடிவேல் படப் பாணியில் 'எதைச் செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும்' என்று கூறினார். அவருக்கு போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி சீருடை எப்படி கிடைத்தது என்றும் விசாரித்தபோது, நண்பர் ஒருவர் மூலம்தான் இந்த ஏமாற்று வேலையில் அவர் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். இதனால் மணிகண்டனின் நண்பர் குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றார். 

மணிகண்டன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஐ.பி.எஸ்.அதிகாரி என்றே குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்மூலம் பல பெண்களுக்கு காதல் வலைவீசி வீழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மணிகண்டனை ஐ.பி.எஸ். அதிகாரி என்று நம்பி பழகியவர்களை அவர் ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் கானத்தூர் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதுதொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். தேவைப்பட்டால் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!