பரங்கிமலை சுவர் அகற்றப்படுமா? - ஆய்வுக்குப் பின் ரயில்வே பாதுகாப்புக்குழு ஆணையர் பேட்டி

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புகுழு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். 

ரயில் விபத்து

சென்னை மின்சார ரயில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் மக்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் எனத் தொடர்ந்து கூட்டநெரிசல் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில், நேற்று சென்னை மின்சார ரயில் பாதையில் உயர் மின்னழுத்த கம்பி அருந்து விழுந்ததால் காலை நேரத்தில் நீண்ட நேரமாக ரயில் இயக்கம் தடைப்பட்டுள்ளது. பிறகு வந்த ரயிலில் மொத்தக் கூட்டமும் ஏறியுள்ளனர். இதனால் ரயிலின் உள்ளே நிற்க இடமில்லாமல் சில இளைஞர்கள், மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அப்போது ரயில் பரங்கிமலை ஸ்டேஷனைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தடுப்புச் சுவரில் இளைஞர்கள் மோதியதில் பலர் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து இன்று ரயில்வே நிர்வாகம் சார்பில் விபத்து நடந்த இடத்தை ரயில்வே பாதுகாப்புக்குழு ஆணையர் மனோகரன் நேரில் பார்வையிட்டார். பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து நான்கு பேர் கொண்ட குழுவினர் விபத்துப் பகுதியை ஆய்வு செய்தனர். நேற்றைய விபத்தில் தண்டவாளத்துக்கும், தடுப்புச் சுவருக்கும் இருக்கும் இடைவெளி மிகவும் குறைவாக உள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளிகள் அளவிடப்பட்டன. மேலும், விபத்து நேரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், அதிகாரிகள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்பட்ட தடுப்புச் சுவர் பற்றித்தான் தொடர்ந்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாதுகாப்புக் குழு ஆணையர் மனோகரன், `` மக்கள் படிகளில் பயணிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வேற்றுப் பாதையில் ரயில் இயக்கப்பட்டபோது விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அப்போது பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடுப்புச் சுவர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ளது போன்று பக்கவாட்டுச் சுவரின் அளவை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். சுவரை அகற்றுவதா இல்லையா என்பது ஆய்வின் முடிவில்தான் தெரிவிக்கப்படும். வரும் 30-ம் தேதி விபத்து குறித்து விசாரணை நடத்த உள்ளோம். பொதுமக்களும் தங்களுடைய கருத்து தெரிவிக்க முன் வரலாம். துபாய் ரயிலில் மூடும் கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டம் சரியாக இருந்தால் அதை இங்கும் செயல்படுத்துவோம். பொதுமக்கள் விழிப்பு உணர்வுடன் பயணம் செய்ய வேண்டும்” எனக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!