``இந்த அசாதாரணச் சூழ்நிலைக்கு சி.பி.எஸ்.இ தான் காரணம்!" - நீட் விவகாரத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி

``இந்த அசாதாரணச் சூழ்நிலைக்கு சி.பி.எஸ்.இ தான் காரணம்!

தமிழ் வழியில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, நாற்பத்தொன்பது கேள்விகள் தவறாக மொழி மாற்றம் செய்யப்பட்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்கு உரித்தான 196 மதிப்பெண்ணைத் தமிழ் வழியில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன். அந்த வழக்கு குறித்து அவரிடம் மேலும் சில தகவல்களைப் பெற்றோம். 

``பொதுவாகத் தமிழகத்தில் உள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி உட்பட அனைத்து ஜனநாயக இயக்கங்களும், நீட் தேர்வு என்பது ஒரு சமதளத்தில் நடத்தக்கூடிய தேர்வு அல்ல என்ற முடிவுக்கு வந்தன. எந்தவொரு போட்டியும் சமதளத்தில் இருக்க வேண்டும். நீட் தேர்வு சமதளத்தில் இல்லாததால், அது நம்முடைய மாநிலத்துக்கு வேண்டாம் என்று சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதியாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இயற்றிய அந்த மசோதா, குடியரசுத் தலைவராக அப்போது இருந்த பிரணாப்முகர்ஜியின் ஒப்புதலைப் பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்த மசோதா குறித்து, நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்குப் பதிலளித்த குடியரசுத் தலைவர், `நீங்கள் குறிப்பிட்டுள்ள மசோதா எனக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் அனுப்பிய கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புகிறேன்' என்றார். 

நீட்

உள்துறை அமைச்சகம் ஏன் இதை உடனடியாகப் பரிசீலித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை? தமிழக மக்களின் கோரிக்கையை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்படிப் புறக்கணித்தால், தேசிய ஒருமைப்பாடு குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும் பி.ஜே.பி. அரசுக்கு என்ன பார்வை இருக்கிறது என்று மாநிலங்களவையில் நான் கேள்வி கேட்டேன். இதுதொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது, தி.மு.க. எம்.பி. சிவாவும், அ.தி.மு.க.-வின் நவநீத கிருஷ்ணனும் இதே கோரிக்கையை ஆதரித்துப் பேசினார்கள். ஆனால், இன்றுவரை அந்த மசோதா பரிசீலிக்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என எந்தத் தகவலும் இல்லை. 

நீட் தேர்வால், மருத்துவப் படிப்பில் சேர முடியாமல், ஆயிரம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த இரண்டு மாணவிகள் மரணமடைந்தனர். தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று கூறி, மாணவர்களை ராஜஸ்தான் மற்றும் கேரளாவுக்கு அனுப்பி தேர்வேழுதச் சொன்னார்கள். தமிழில் தேர்வு எழுதியவர்களும், அவர்களுக்குப் பயிற்சியளித்த அமைப்பும் கேட்டுக் கொண்டதன்பேரில் நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்தோம். நூற்றி எண்பது கேள்விகளில் நாற்பத்து ஒன்பது கேள்விகள், தமிழில் தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தன என்பது தெரியவந்தது. சரியான கேள்விக்குத் தவறான விடை அளித்தாலே ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் எனும் பட்சத்தில், தவறான மொழிபெயர்ப்பு இருக்கும்போது சரியான பதில் எப்படி அளிக்க முடியும்?

தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இந்நிலையில், நீட் தேர்வில் சில குழப்பங்கள் ஏற்பட்டபோதும் பெற்றோர்கள் மாணவர்களைப் பயிற்சி மையத்துக்கு அனுப்பினார்கள். தேர்வு குறித்த இடையூறுகளைச் சுட்டிக்காட்டும் இதே நேரத்தில், தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த விஷயத்தை நீதிமன்றத்தின் கவனத்தில் கொண்டு செல்ல முடிவெடுத்தோம். தற்போது, இந்த வழக்கில் சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்துள்ள நிலையில், எங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளோம்.

டி.கே.ரங்கராஜன்

அதேநேரத்தில், இந்த ஆண்டு மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதினேன். இந்த அசாதாரணமான சூழ்நிலைக்கு சி.பி.எஸ்.இ-தான் காரணம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, இந்த ஆண்டு மருத்துவப்படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் இடங்கள் உயர்த்தப்பட வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களை மருத்துவம், பல் மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம் என்று அனைத்து இடங்களிலும் சேர வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் அரசுக் கட்டணம் தவிர்த்த இதரக் கட்டணத்தை சி.பி.எஸ்.இ செலுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

இவ்வளவு குழப்பங்களுக்குப் பிறகும் நாங்கள் மீண்டும் நம்புவது, கல்வி என்பது மாநில அரசின் கையில் இருக்கவேண்டும் என்பதைத்தான். மத்திய அரசு வழிகாட்டலாமே அன்றி, முழுமையாகக் கல்வியின் மீதான உரிமையை மாநில அரசுக்குத்தான் அளிக்கவேண்டும். தவிர, மாணவர்களின் அதீத திறமைகளுக்கு ஏற்ப கல்வியின் தரத்தைமேலும் உயர்த்த வேண்டும்” என்றார் டி.கே. ரங்கராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!