`சிறுத்தையா... காட்டுப் பூனையா?' - கல்லூரி வளாகத்தைக் கலங்கடித்த வனத்துறை

வனத்துறை

குமரி மாவட்டத்தில் தனியார் கலைக் கல்லூரியில் சிறுத்தை புகுந்துவிட்டதாக வெளியான தகவலால், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் மாணவர்கள்.  தீவிர தேடுதலில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

நாகர்கோவில், இந்து கல்லூரியில் புதர் மண்டிக்கிடந்த பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரங்குடி பகுதியைச் சேர்ந்த மனோகரன், குஞ்சரராஜ் ஆகிய இரு தொழிலாளிகளும், புல்வெளிகளுக்கிடையே இரண்டு சிறுத்தைக் குட்டிகள் ஓடுவதைப் பார்த்ததாக நிர்வாகத்திடம் கூறினர். இதையடுத்து, 'கல்லூரி வளாகத்தில் குட்டிப்போட்டு இனப்பெருக்கம் செய்திருக்கலாம்' என்ற தகவல் பரவியது. இதையடுத்து, வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர் கல்லூரி நிர்வாகிகள். சம்பவ இடத்துக்கு வந்த  அதிகாரிகளோ மாணவ, மாணவிகளை வகுப்பறைக்குள்ளே அமரும்படியும் வெளியே வர வேண்டாம் எனவும் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து புதர்களுக்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சிறுத்தை

நீண்ட நேரம் தேடியும் எந்த மிருகமும் தென்படவில்லை. பின்னர், அப்பகுதியில் பதிந்திருந்த கால்தடங்களைச் சேகரித்த வனத்துறையினர், 'காட்டுப் பூனையாக இருக்கலாம்' என்ற முடிவுக்கு வந்தனர். 'ஒருவேளை சிறுத்தை நடமாட்டம் இருந்தால் கூண்டுவைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தனர். இந்தக் குழப்பத்தால், கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!