வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (25/07/2018)

கடைசி தொடர்பு:16:54 (25/07/2018)

சங்கரநாராயணர் கோயிலில் ஆடித் தபசு திருவிழா தேரோட்டம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோயிலில் ஆடித்தபசு விழாவின் ஒருபகுதியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் தேரோட்டம்

தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சங்கரநாராயணர் சுவாமி கோயிலின் ஆடித்தபசு திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இந்தக் கோயிலின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. அதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அன்றைய தினம் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

சங்கரநாராயணர் கோயிலின் கொடியேற்றத்துக்குப் பின்னர், தினமும் காலையும் மாலையும் கோமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் வாகனங்களில் வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் 8-ம் நாளான நேற்று கோமதி அம்பாள் வீணாகாணம் செய்தல் அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து வடக்கு மண்டகப்படியில் அம்பாள் எழுந்தருளினார். இரவில் ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார். 

விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் கோமதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பாக அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், தேரோட்டம் தொடங்கியது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரான ராஜலட்சுமி தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 ஆடித்தபசு திருநாள் 27-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக முதல் காட்சி அளிகிறார். இரவு 9 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி அளிக்கிறார். அரியும் சிவனும் ஒன்று என்னும் அரிய தத்துவத்தை விளக்கும் இந்தச் சிறப்பு மிகுந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பாகச் சிறப்பான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.