`முதல்வரும் துணை முதல்வரும் மத்திய அரசோடு இணக்கமாக உள்ளனர்’ - டாக்டர் கிருஷ்ணசாமி

முதல்வரும் துணை முதல்வரும் மத்திய அரசோடு இணக்கமாக உள்ளதாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திருச்சி வந்திருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திருச்சி சங்கம் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``20 வருடங்களுக்கும் மேலாகப் பள்ளி பாடத்திட்டத்தில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாத சூழலில்தான் தமிழ் நாட்டின் கல்வி தரம் குறைந்தது. தமிழ்நாடு அரசு தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. இது நல்ல கல்வியாளர்களால் சிந்திக்கப்பட்டு வடிவம் கொடுக்கப்பட்ட பாடத்திட்டம். இதை ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களிடம் கொண்டு சேர்த்தாலே, உலக அளவில் சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள். இந்தப் பாடத்திட்டத்தில் ஒரு சில தலைவர்களை மட்டும் திணிப்பது தவறானது. அது ஏற்புடையதல்ல,சுதந்திரத்துக்காக, தமிழ் மொழிக்காக, சமத்துவத்துக்காக எண்ணற்றோர் உயிர் நீத்து இருக்கிறார்கள் அவர்கள் அனைவரின் வரலாறுகளையும் புதிய பாடத்திட்டத்தில் துணைப் பாடமாகச் சேர்க்க வேண்டும். இமானுவேல் சேகரன் உள்ளிட்டோர் வரலாறுகளைப் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,  வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி பரமக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.  மக்களவை தேர்தலின்போது தேர்தல் யுத்திகளை வகுத்து யாரிடம் கூட்டணி வைப்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறார்கள்.இருந்தபோதும் பாதுகாப்புத்துறை அமைச்சர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்காததில் என்ன அரசியல் என்று தெரியவில்லை, துணை முதலமைச்சரை அவர் சந்திக்காதது ஏற்புடையதல்ல. சொத்து வரியைத் தமிழ்நாடு உயர்த்தியது எந்த விதத்திலும் சரியானதல்ல, அதை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அதைத் தேக்கி வைத்து முறையாகப் பயன்படுத்தும் விதத்தில் அதற்குத் தனியாக நிதி ஒதுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய தமிழகம் எல்லா அரசியல் கட்சிகளோடும் இணக்கமாக இருக்கிறோம்’’ என்றார்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!