அடுத்த 'மூவ்' ரெஸ்ட்டுதான்: மு.க. அழகிரி

சென்னை:  தனக்கு உடல்நிலை சரியில்லாததால் திமுக செயற்குழுவில் பங்கேற்கவில்லை என்று  அக்கட்சியின் தென் மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
 
திமுக. செயற்குழு கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய நிலையில், இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில்  இக்கூட்டத்தில் மு.க. அழகிரி கலந்துகொள்ளவில்லை.இது திமுக வட்டாரத்தில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மு.க. அழகிரி, நேற்று கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கருணாநிதியிடம் உடல்நலம் குறித்து அழகிரி விசாரித்தார்.
 
இதனால் அழகிரி இன்று தி.மு.க. செயற்குழுவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செயற்குழுவில் பங்கேற்காமல் அதனை புறக்கணித்த மு.க. அழகிரி, இன்று மதுரை வந்தார்.
 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், திமுக. செயற்குழு கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? என்று கேட்டபோது, " செயற்குழுவில் 250 பேர் உள்ளனர். கூட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மதுரைக்கு வந்து விட்டேன்" என்று பதிலளித்தார்.
 
மத்திய அமைச்சர்  ஜி.கே.வாசனை சந்தித்தது ஏன்? என்று கேட்டபோது, " ஜி.கே.வாசனை மட்டுமல்ல. சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரையும் சந்தித்து பேசினேன். நட்பு ரீதியாக சந்தித்து பேசினேன்" என்று கூறினார்.
 
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டீர்களே? உங்களது அடுத்த 'மூவ்' என்ன? என்ற கேள்விக்கு,  'ரெஸ்ட்' தான்( ஓய்வு)  என பதிலளித்த அழகிரி, " அலுவலகம் செல்ல முடியாது. மக்கள் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று மேலும் கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!