`10 லட்சம் ரூபாயுடன் எஸ்கேப் ஆக நினைத்தேன்’ - சிக்கிய ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்

ஆட்டோ டிரைவர் கைது

 
நெல்லை ரியல் எஸ்டேட் அதிபர் ஆட்டோவில் தவறவிட்ட 10 லட்சம் ரூபாயை 12 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். பணத்தை அபேஸ் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், தென்காசி, குற்றாலத்தைச் சேர்ந்தவர் அன்னராசு. இவரும், தன்னுடைய தொழில் பாட்னர் பாளையங்கோட்டை, மகாராஜா நகரைச் சேர்ந்த ராஜாவும் சேர்ந்து சென்னை எழும்பூருக்கு ரயிலில் வந்தனர். பிறகு, இருவரும் ஆட்டோவில் வில்லிவாக்கம் சென்றனர். அப்போது, அவர்கள் கொண்டு வந்த டிராவல் பேக் மாயமாகியிருந்தது. அதில் ரூ.10,00,000 இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். 

 உடனடியாகப் போலீஸார் எழும்பூரிலிருந்து வில்லிவாக்கம் வரை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோ குறித்த விவரம் கிடைத்தது. அதில் உள்ள பதிவு எண் மூலம் ஆட்டோ டிரைவரை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர், சென்னை புளியந்தோப்பு, சுந்தரபுரத்தைச் சேர்ந்த கோபி எனத் தெரியவந்தது. அவரைத் தேடி போலீஸார் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அவர் வீட்டில் இல்லை. தலைமறைவாகிய கோபியைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்தநிலையில் கோபியே புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடமிருந்த 10 லட்சம் ரூபாயையும் போலீஸார் மீட்டனர். ஆட்டோ டிரைவர் கோபியிடம் போலீஸார் விசாரித்தபோது, பணத்தைப் பார்த்ததும் மனம் மாறிவிட்டது. பணத்துடன் வெளியூருக்கு தப்பிச் செல்ல முடிவு செய்தேன். ஆனால், போலீஸார் என்னைத் தேடுவது தெரிந்ததும் பயந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார். 

பணம் மாயமான 12 மணி நேரத்தில் அதை மீட்ட போலீஸாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை பாராட்டினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!