`எரிந்த தீக்குச்சியானது எங்களின் நிலைமை...’ வேதனையில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் | Lorry Strike continues for 6th day;

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (25/07/2018)

கடைசி தொடர்பு:17:15 (25/07/2018)

`எரிந்த தீக்குச்சியானது எங்களின் நிலைமை...’ வேதனையில் தீப்பெட்டித் தொழிலாளர்கள்

லாரிகள் வேலை நிறுத்தம் 6 வது நாளாகத் தொடருவதால், கோவில்பட்டியில் ரூ.150 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளதாகவும், ரூ.300 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீப்பெட்டி

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கயத்தார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, ஏழாயிரம் பண்ணை, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 300 பகுதி இயந்திர  தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 25 முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 1,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி சார்ந்த சிறு, குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

லாரி ஸ்டிரைக்

தமிழகத்திலிருந்து வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் தீப்பெட்டி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக டில்லி, பஞ்சாப், ஹரியானா, குஜராத், உத்தரப்பிரேதசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளுக்குத் தரைமார்க்கமாக லாரிகள் மூலமாகவும்  வெளிநாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலமாகவும் தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக மூலப்பொருள்களின் விலையேற்றம், தீப்பெட்டி பண்டல்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்ற காரணத்தால் நலிவடைந்து வந்த இந்தத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரியும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாகச் சுமார் ரூ.150 கோடி வரை தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவில்பட்டி, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ``ஏற்கெனவே வடமாநிலங்களில் பெய்த கனமழையால் தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் லாரிகளின் ஸ்டிரைக்கால் தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே குடேன்களில் தேக்கி வைக்கப்பட்ட பண்டல்களைத் தவிர வெளியேயும், அலுவலகங்களிலும் பண்டல்களை வைக்கும் நிலை உள்ளதால், தொடர்ந்து உற்பத்தி செய்தால் பண்டல்களை எங்கு வைப்பது என்பது எனத் தெரியவில்லை. எனவே 20% உற்பத்தியாளர்கள் ஆலைகளை மூடி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

இதனால் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்டிரைக்கால், ரூ.150 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. ரூ.300 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழில் மட்டுமின்றி டிரான்ஸ்போர்ட் தொழிலும் முடங்கிப்போய் உள்ளது. ஏற்கெனவே புக்கிங் செய்தவர்களுக்கு பண்டல்களை அனுப்ப முடியாத நிலையில், புதியதாகவும் ஆர்டர்கள் புக்கிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

`எரிந்த தீக்குச்சியானது எங்களின் நிலைமை’ என்ற வேதனையில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் உள்ளனர்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க