வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (25/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (25/07/2018)

`அவர் நல்லவர் இல்லை சார்’ - மனைவி கொடுத்த புகாரில் கைதான கணவர்

மனைவி கொடுத்த புகாரில் ஆட்டோ டிரைவர் கைது

சென்னையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தந்தையைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரின் தந்தையைப் போலீஸார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி, ஸ்ரீதர் மீது பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``தன்னுடைய மகளுக்கு ஸ்ரீதர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, ஸ்ரீதரிடம் விசாரித்து அவரைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.

``ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர், குடிபழக்கத்துக்கு அடிமையானவர். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர், தனியாக இருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நீண்ட காலமாக நடந்த இந்தத் தொல்லை குறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னுடைய தாயிடம் தெரிவித்தார். ஸ்ரீதரின் மனைவியும் தன்னுடைய கணவருக்கு புத்திமதிகளைக் கூறியுள்ளார். ஆனால், அவர் திருந்தவில்லை. அதன் பிறகே இந்தச் சம்பவம் போலீஸ் நிலையம் படியேறியது. தற்போது, ஸ்ரீதர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்"  என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.