கணினி மயமாக்கப்படும் 9 லட்சம் அரசுப்பணியாளர்களின் பணிப்பதிவேடு!

கணினி மூலம் பணப் பரிவர்த்தனை முறைப்படுத்தப்படுவதால் மனிதத் தவறுகள், முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

கணினி மயமாக்கப்படும் 9 லட்சம் அரசுப்பணியாளர்களின் பணிப்பதிவேடு!

``தமிழகத்திலுள்ள கருவூலங்கள் காகிதமில்லா அலுவலகங்களாக மாற்றப்படுவது மட்டுமல்லாமல், நேரடி இணையத்தின் மூலம் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. புதிய திட்டத்தினால் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட நாளன்றே, அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். அது மட்டுமல்லாது, அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பல்வேறு வசதிகளை இணையம் மூலமாகவும், அலைபேசி செயலி மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்'' என்று கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் தென்காசி ஜவஹர் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட மாநாடு மாவட்ட ஆட்சியர் ஏ. சிவஞானம் முன்னிலையில் நடந்தது. இதில், அரசு முதன்மைச் செயலாளரும், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி எஸ். ஜவஹர் கலந்து கொண்டு பேசினார். அவர், ``கருவூலம் மற்றும் கணக்குத்துறையானது, கடந்த 1962-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நிதித்துறையின் கீழ் தனியான ஒரு துறையாகச் செயல்பட்டு வருகிறது.

ஜவஹர் ஐ.ஏ.எஸ்.

மாநிலம் முழுவதும் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மூலமாக அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட வரவு-செலவு நிதி கையாளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெறவும் கருவூலப்பணிகளை மேம்படுத்தும் பொருட்டும் பிரத்தியேகமான வழிமுறைகள் கையாளப்படுகிறது. அந்த வகையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக அரசு ரூ. 288.91 கோடி அளித்துள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லியில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், தங்களின் சம்பளப் பட்டியல்களை நேரடி இணையம் மூலம் எவ்வித காலவிரயமுமின்றி கருவூலத்தில் சமர்ப்பிக்கலாம்.

இதன்மூலம் காகிதமற்ற அலுவலகங்களாகக் கருவூலங்கள் மாற்றப்படுவதுடன், சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள், பட்டியல்களைச் சமர்ப்பிக்க இனி நேரில் வர வேண்டியதில்லை. இணையம் மூலம் சம்பளப் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் பயனாளியின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். சம்பளம் அளிக்கப்படுவதன் ஒவ்வொரு நிலையையும் இணையம் மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம். தற்போதுள்ள நடைமுறையின்படி, கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்த நாளிலிருந்து ஆறு முதல் 10 நாள்களுக்குப் பிறகே தொகைப் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 

காகிதங்களுக்குச் செலவிடப்படும் தொகையும் குறைக்கப்படுவதுடன், அலுவலர்களின் பணிச்சுமையும் குறையும். கணினி மூலம் பணப் பரிவர்த்தனை முறைப்படுத்தப்படுவதால் மனிதத் தவறுகள், முறைகேடுகள் தவிர்க்கப்படும். மாதாந்திரக் கணக்கு தயாரித்தல் மற்றும் பணமாக்கப்பட்ட பட்டியல்களை பல்வேறு சார்நிலைக் கருவூலங்களிலிருந்து மாவட்டக்  கருவூலத்துக்கும், அங்கிருந்து மாநில கணக்காயர் அலுவலகத்துக்கும் அனுப்பும் நிலை ஏற்படாது.

விருதுநகரில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட மாநாடு

இந்திய ரிசர்வ் வங்கியுடன் நேரடியாக இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், மற்ற வங்கிச் சேவைகளுக்காக வழங்கப்பட்டு வந்த கட்டணங்களும் சேமிக்கப்படும். அரசின் வருவாயை இணையவழியில் பெற வழி செய்யப்பட்டுள்ளதால் அரசின் வரவினை உடனுக்குடன் அறிய இயலும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்படுவதால் சிறந்த மேலாண்மைக்கு இது வழிவகுக்கும். பணமாக்கப்பட்ட பட்டியல்கள் காணாமல் போகும் நிலை இனி நிகழாது. இத்திட்டம் மூலமாக சுமார் ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்படுகிறது. ஏதாவது, திருத்தங்கள் இருந்தாலும் இணையம் மூலமாகவே அறிந்து, அதனை மேற்கொள்ள முடியும். ஓர் ஊழியர் தன் பணிப் பதிவேட்டையும் ஆன்லைனிலேயே அறிந்து கொள்ளலாம்.

மேலும் பணிப்பதிவேடுகள் கணினி மூலம் மேற்கொள்ளப்படுவதால் பதவி உயர்வு கருத்துருக்கள் தயாரித்தல், வருடாந்திர ஊதிய உயர்வு அங்கீகரித்தல், ஊதிய நிர்ணயம், விடுப்பு அங்கீகரிப்பு மற்றும் ஓய்வூதியக் கருத்துருக்கள் அனுப்புதல் போன்ற பணிகளைச் சரியான காலத்தில் மேற்கொள்ள இயலும். இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்போது ஓய்வூதியர்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். இத்திட்டமானது விரல்ரேகை பதிவுமுறை உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்புதிய திட்டம் வரும் நவம்பர் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி கருவூல அலுவலர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கபட்டு வருகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!