திருப்புல்லாணி பகுதியில் திடீர் நிலவெடிப்பு; அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் | Sudden landfall in Tirupullani area - People left home because of fear

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (25/07/2018)

கடைசி தொடர்பு:19:45 (25/07/2018)

திருப்புல்லாணி பகுதியில் திடீர் நிலவெடிப்பு; அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

ராமநாதபுரத்தை அடுத்துள்ள திருப்புல்லாணியில் உள்ள நிலப்பகுதியில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

திருப்புல்லாணி பகுதியில் ஏற்பட்ட நிலவெடிப்பினை ஆய்வு செய்யும் அலுவலர்கள்
 

ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள், விவசாய நிலங்கள் எனப் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளது. மக்களின் எதிர்ப்பை மீறி இந்த இடங்களிலிருந்து இயற்கை எரிவாயு உரிஞ்சப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருப்புல்லாணி-கீழக்கரை இடையே உள்ள வளையநேந்தல் கிராமப் பகுதிகளில்  உள்ள நிலப்பரப்பில், இன்று காலை திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. புளியம்பட்டி, வளையநேந்தல், இந்திரா நகர் உள்ளிட்ட சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், காட்டுப் பகுதிகளில் இந்த விரிசல் நீண்டுள்ளது. வளையநேந்தல் கிராமத்தில் உள்ள சில குடியிருப்புகளிலும் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வசித்துவந்த சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

திருப்புல்லாணி யில் ஏற்பட்ட நிலவெடிப்பால் அச்சம் அடைந்த மக்கள் 
 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயுஎடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அமைத்த ஆழ்துளைக் கிணறுகள்தான் இந்த நிலவெடிப்புக்குக் காரணம்'' என்றார். இந்நிலையில், அங்கு வந்த கணிமவளத்துறை புவியியல் அதிகாரிகள், நிலவெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று ஆய்வுசெய்து வருகின்றனர். இதனிடையே, கடந்த  மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக இந்த வெடிப்பு உருவாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 
பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் வந்த திருப்புல்லாணி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, நிலவெடிப்பினால் வீட்டை விட்டு வெளியேறியுள்ள குடும்பத்தினர் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்துவருவதாகத் தெரிவித்தார்.