`இது துரோகத்தின் பரிசு' - ஓ.பி.எஸ்ஸை கலாய்த்து கருத்து தெரிவித்த செந்தில் பாலாஜி!

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் செய்த துரோகம்தான் என தினகரன் அணியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்

தன் ஆதரவாளர்களுடன் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறபட்டுச் சென்றார். அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்காகச் சென்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மத்திய அமைச்சரை சந்தித்துப் பேசினார். அவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு அழைப்பு வராததால், நிர்மலா சீதாராமன் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு டெல்லி விமான நிலையம் சென்றார் அவர். இதையடுத்து நிர்மலா சீதாராமன் அலுவலகத்திலிருந்து மைத்ரேயனுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திக்க மறுத்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், `எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென அண்ணா சொல்லிருக்கிறார்' எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் தினகரன் அணியைச் சேர்ந்தவருமான செந்தில் பாலாஜி தனது ட்விட்டரில், ``சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நாட்டின் பிரதமரை எளிதாகச் சந்தித்த OPS! துணை முதலமைச்சர் OPS-யை சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு. துரோகத்துக்கான பரிசு..!' என்று பதிவிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!