கல்விக்கடனுக்கான நிபந்தனைகள் - உயர் நீதிமன்றத்தில் பட்டியலிட்ட வங்கி!

கல்விக்கடனுக்கு 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்

வாங்கிய கடனை தந்தை திருப்பி செலுத்தாததால், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்ஸிங் கல்லூரி மாணவி தீபிகாவுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி வைத்தியநாதன், வங்கி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து தீபிகா மேல் முறையீடு செய்தார். அதில், தன் தந்தைக்கு கடன் ஏதும் நிலுவையில் இல்லை எனவும் தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, பாரத ஸ்டேட் வங்கி, 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கல்விக்கடனுக்கு 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க  வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை பெற்றிருந்தால் கல்வி கடன் வழங்கப்படாது. விண்ணப்பதாரரின் தந்தைக்கு எந்தக் கடனும் இருக்க கூடாது என விதிமுறைகள் இருப்பதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!