நீலகிரியில் ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட 30 பேர் கொண்ட குழு..!

நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி, தாெரப்பள்ளி என்ற இடம் அமைந்துள்ளது. கடந்த 17-ம் தேதி தாெரப்பள்ளி டவுன் பகுதிக்குள், இரண்டு யானைகள் நுழைந்ததை அறியாமல் காலை சுமார் 6 மணியளவில் மதரசா பள்ளிக்குச் சென்ற சிறுவர்கள் சிலரும் முதியவர் ஒருவரும் யானைகளைப் பார்த்து பயந்து ஓடியதில், கீழே விழுந்து காயமடைந்தனர்.

அதில் பலத்த காயமடைந்த முதியவர் அப்துல் ரஹ்மான் (53), சிறுமி ரிஷானா (8) ஆகியோரை மீட்டு, அப்பகுதி பாெதுமக்கள் கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தாெரப்பள்ளி டவுன் பகுதிக்குள் அடிக்கடி யானைகள் நுழைந்து பாெதுமக்களை அச்சுறுத்துவதாகக் கூறி கூடலுார், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்ரியா, 15 நாள்களில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் பாேராட்டம் கைவிடப்பட்டது. 
இந்நிலையில், முதுமலை வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள தாெரப்பள்ளி டவுனுக்குள் யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக, முதுமலை வனத்துறை சார்பில் மனித யானை மோதல்களைத் தடுப்பதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றி வரும் வேட்டை தடுப்புக் காவலர்கள், வனக்காவலர், பாரஸ்டர், ரேன்ஜர் மற்றும் வன ஆர்வலர்கள் என 30 பேர் காெண்ட குழு கண்காணிப்புப் பணியைத் தாெடங்கியுள்ளனர்.  

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ``தாெரப்பள்ளி டவுன் பகுதிக்குள் யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காகக் கார்குடி ரேஜ்சர் சிவக்குமார் தலைமையில் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியைத் தாெடங்கியுள்ளனர். முதற்கட்ட கண்காணிப்பில் குட்ஷெப்பேர்டு பார்ம், அல்லுார் வயல், மாௌப்பள்ளி உள்ளிட்ட 6 பாதைகள் வழியாக யானைகள் தாெரப்பள்ளி டவுனுக்குள் நுழைவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 30 பேரும் குழுக்களாகப் பிரிந்து, இந்த 6 இடங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை துப்பாக்கி, வெடிகளுடன் நெருப்பு மூட்டி, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!