வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (25/07/2018)

கடைசி தொடர்பு:20:21 (25/07/2018)

`18 எம்.எல்.ஏ-க்களைக் காப்பாற்ற தி.மு.க-வுக்கு என்ன அக்கறை?’ உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு கேள்வி

ஆட்சியைக் கலைக்கும் அதிகாரம் மட்டுமே உடைய ஆளுநரிடம் அரசியல் சாசன கடமையை ஆற்றும்படி புகார் அளிப்பது அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க கோருவதாக மட்டுமே கருதமுடியும் எனச் சபாநாயகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். நேற்று டி.டி.வி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் தன் வாதத்தைத் தொடங்கியுள்ளார். அதில், கட்சிக்கு வெளியிலிருந்து தாக்குதலை நடத்தும்போது அது கட்சியைவிட்டு வெளியேறியதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். தங்களுடைய ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஆளுநரிடம் மனு அளித்தது என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசின் மீதான அவர்களின் ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவே கருத முடியும்.

18 எம்.எல்.ஏ-க்கள் தனி நபர்மீது புகார் அளிக்கவில்லை. அ.தி.மு.க உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவை கொண்ட முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். முதல்வருக்கு எதிராக ஆளுநரால் நடவடிக்கை எடுக்க முடியாது என டி.டி.வி தரப்புக்கு தெரியும். ஆளுநருக்கு அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே உள்ளது. அவரிடம் அரசியல் சாதன கடமையை ஆற்றுங்கள் எனக் கூறுவது ஆட்சியைக் கலைப்பதற்காக அளித்த புகாராகவே கருத முடியும் என்றும் வாதிட்டார். 18 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே நீதிமன்றத்தைத் தி.மு.க நாடியது ஏன். 18 எம்.எல்.ஏ-க்களை காப்பாற்ற தி.மு.க-வுக்கு என்ன அக்கறை என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி சத்தியநாரயாணன் அடுத்த மாதம் 3-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.