வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:13:03 (17/08/2018)

தர்ஹா திருவிழாவுக்கு அனுமதியின்றி அழைத்துவரப்பட்ட யானை..! கைப்பற்றிய வனத்துறை

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, உரிய ஆவணங்கள் இன்றி அழைத்துவரப்பட்ட யானையை வனத்துறையினர் தடுத்துநிறுத்தி வைத்துள்ளனர்.

ஏர்வாடி தர்ஹா திருவிழாவிற்கு அனுமதியின்றி அழைத்து வரப்பட்ட யானை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷகீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. மனநலம் குன்றியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் இங்கு தங்கியிருந்து வழிபட்டுவந்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதையடுத்து, தமிழகம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், இங்கு சாதி, மதம், மொழி பாராது வந்து வழிபாடுசெய்வதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். இங்கு, ஆண்டுதோறும் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. 

844-ம் ஆண்டு சந்தனக்கூட்டுக்கான மவுலீது எனும் புகழ்மாலை, கடந்த சனிக்கிழமை மாலை துவங்கியது. இதன் தொடர்ச்சியாக சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம், நேற்று (24-07-2018) மாலை நடந்தது. இந்த நிகழ்சியில் கொடி வைக்கப்பட்டிருந்த ரதம் யானை, குதிரை ஆகியன முன் செல்ல ஊர்வலம் வந்தது. இந்நிலையில், ஊர்வலத்தில் பங்கேற்ற யானை உரிய அனுமதி இல்லாமலும், யானை பங்கேற்பதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் வனச்சரகருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர் பாட்ஷா, இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, திருவிழாவில் பங்கேற்க வந்த யானையை வனத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு அழைத்துச் சென்றனர். உரிய ஆவணங்கள் தாக்கல் செய்தபின் யானை விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.