வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (25/07/2018)

கடைசி தொடர்பு:21:25 (25/07/2018)

வியாபாரமாகும் கல்வி... துணைபோகும் அரசுகள்... கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்!

`உயர்கல்வியைத் தனியார்மயப்படுத்தியது காங்கிரஸ் கட்சி... கார்ப்பரேட் மயப்படுத்தியது பி.ஜே.பி. கட்சி’ – இந்திய உயர்கல்வி ஆணையத்தின் பின்னணியை விளக்கும் விவாத நிகழ்ச்சி குறித்த கட்டுரை...

வியாபாரமாகும் கல்வி... துணைபோகும் அரசுகள்... கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்!

ந்தியாவில் உயர்கல்வியை ஒழுங்குமுறைபடுத்தும் அமைப்பாக யு.ஜி.சி (பல்கலைக்கழக மானியக் குழு) 1953-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. ``பல்கலைக்கழகங்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும், மானியங்கள் வழங்குவதையும் பணியாகக் கொண்டு இயங்கும் யு.ஜி.சி அமைப்பு கலைக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிதாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும் எனவும், அதன் மசோதா வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்'' எனவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். 

இந்த அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் கல்வியாளர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாகச் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 - பிரச்னைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், சிவக்குமார், முனைவர்கள் கிருஷ்ண பிரதான், ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தின் சார்பில், `கார்ப்பரேட் பிடியில் உயர்கல்வி' என்ற தலைப்பில் ஆங்கிலப் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளியிட, முனைவர் ரமேஷ் பெற்றுக்கொண்டார். 

 ‘இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 - பிரச்னைகள் மற்றும் சவால்கள்’

இந்தக் குழு விவாதத்தை முனைவர் ரமேஷ் தொடங்கிவைத்துப் பேசிய அவர், “2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழா மேடையில் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், வெளிப்படையாக... `பாட்னா பல்கலைக்கழகத்துக்குத் தேசியப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார். அப்போது அதே மேடையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, `மத்திய அரசு தலைசிறந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கும் கனவுத் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. பாட்னா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக உருவாக, அதன் நிர்வாகமும், முன்னாள் மாணவர்களும் உதவி செய்ய வேண்டும்’ என்றார். பிரதமர் மோடி அவ்வாறு கூறியதன் பொருள், மத்திய அரசு இனி பல்கலைக்கழகங்களுக்கு மானியம் வழங்காது என்பதும், பாட்னா பல்கலைக்கழகம் தன் முன்னாள் மாணவர்களிடம் நிதியுதவி பெறலாம் என்பதும், மத்திய அரசு கொண்டுவரும் சீர்திருத்தங்களை, அமல்படுத்தும் பல்கலைக்கழகங்களுக்கு நிதி அளிக்கப்படும் என்பதுமே ஆகும். இது, இந்திய உயர்கல்வியை வணிகமயமாக்க மத்திய அரசு உருவாக்கியுள்ள முயற்சி என்பதை பிரதமர் மோடியின் பேச்சு வெளிபடுத்தியது” என்றார். 

மேலும் அவர், “மதிப்புமிகுந்த நிறுவனங்கள் (Institute of Eminence) பட்டியலில் பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கிய சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் இடம்பெறவில்லை. ஆனால், திறக்கப்படாத ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஸ்டிட்யூட் இடம்பெற்றுள்ளது. உயர்கல்வியைத் தனியார்மயப்படுத்தும் பணிகள் கடந்த பல வருடங்களாக நடந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்கலைக்கழகங்கள் தங்களுக்குத் தேவையான நிதியை மாணவர்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பில் இருந்து, அதிக பணம் ஈட்டக்கூடியனவாகப் பல்கலைக்கழகங்கள் மாறும் அபாயம் இந்த மசோதாவினால் ஏற்படவுள்ளது” என்றார், மிகத் தெளிவாக.

அடுத்துப் பேசிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ண பிரதான், “இந்தியாவின் கடவுள்களான பாரத் மாதாவுக்கு 1947-ம் ஆண்டு விடுதலை கிடைத்தது; லட்சுமிக்கு 1991-ம் ஆண்டு விடுதலை கிடைத்தது. இந்தக் கல்வி மசோதாவின் மூலம், சரஸ்வதிக்கு விடுதலை கிடைக்கும்” என்று தொடங்கிய அவர், தொடர்ந்து பேசினார். “இந்தியாவின் மிகப்பெரிய வரம் அதன் மக்கள்தொகை. தொடக்கக் கல்வி முதல் இலவசமாகக் கிடைக்கும் நாட்டில், தரமான உயர்கல்வியை இலவசமாக அளிக்க முடியாது. அது மட்டுமல்லாமல், உலகின் சந்தை தேவைகளை தற்போதைய கல்வி முறையால் பூர்த்தி செய்ய முடியாது. சந்தைக்குப் போதுமான மனித வளங்களை உருவாக்க உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்” என்றார். 

பேராசிரியர் சிவக்குமார், “நானும் பேராசிரியர் அ.மார்க்ஸும் பேராசிரியர்களுக்கான சங்கங்களை நடத்தி இருக்கிறோம். எங்களுக்கு தலித், சிறுபான்மையின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி நிலையங்களில் உயர்கல்விக்காகப் படும் துன்பங்களைப் பற்றிய அனுபவங்கள் இருக்கின்றன. 1927-ம் ஆண்டு ரூர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அன்றைய ஆங்கிலேயப் பொறியியலாளர்களுக்கு உதவி செய்ய இந்தியப் பொறியியலாளர்களை உருவாக்க அந்தக் கல்லூரி செயல்பட்டது. இந்தியக் கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை அந்தக் கல்லூரி உருவாக்கியது. 1991-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றப்பட்ட பிறகு, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கான உதவித்தொகைகள் குறைக்கப்பட்டன. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில், இரண்டு வகையான பாடப்பிரிவுகள் தரப்படுகின்றன. ஒன்று, அரசு உதவிபெறும் பாடங்கள் (Aided subjects); மற்றொன்று, சுயநிதிப் பாடங்கள் (Self financed). அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளில் கல்வி பயிலும் தலித், சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மாணவர்களால் சுயநிதிப் பிரிவில் இருக்கும் பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி முதலான பாடங்களைப் பயில முடியாது. அவர்களுக்கு, அரசு உதவிபெறுபவை என்று குறிப்பிட்ட பாடங்களைத் தாண்டி அவர்களுக்கு படிக்கக் கிடைப்பதில்லை. 1945-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் ஆணையம் யு.ஜி.சி அமைப்பை உருவாக்க முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கின்றன. யு.ஜி.சி நிர்வாகத்தில் குழப்பங்கள் இருக்கலாம். அதனை மறுபரிசீலனை செய்ய குழுக்கள் அமைப்பது ஏற்புடையதாக இருக்கும்; ஆனால் யு.ஜி.சி அமைப்பைக் கலைப்பது உயர்கல்வியின் வளர்ச்சிக்கு ஆபத்தாக முடியும்” என்றார். 

கல்வி

பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசுகையில், “உயர்கல்வித் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது. வடக்கு, தெற்கு என்று ஒப்பிட்டால், தென் இந்தியா, வட இந்தியாவைவிட முன்னேற்றப் பாதையில் இருக்கிறது. கலைப்பாடங்கள் (Humanities) மீதான ஒழிப்பு நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நடந்துவருகின்றன. `டெல்லி ஜே.என்.யூ-வில் தொழிற்பாடங்கள் தொடங்கப்படும்' என்ற அறிவிப்பும் இதனோடு பொருந்திப் போகின்றன. கலைப்பாடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், அரசியல் புரிதலோடு இருக்கின்றனர். சென்னை ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த பேராசிரியர் ராதா ராஜன், `கலைப்பாடங்களில் இருக்கும் பன்மை ஒழுங்கு அணுகல்முறை (Inter Disciplinary Approaches) மாணவர்கள் சீரழியக் காரணம்' எனக் கூறியதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசுத் தலையீடு இல்லாமல் இயங்கும் மற்ற கல்வித் தலைமை அமைப்புகளையும் கலைக்கும் முயற்சிகள் அடுத்தடுத்து அரங்கேறும். உயர்கல்வி என்பது அரசு அதிகாரத்துக்குட்பட்ட ஒரே மைய நிறுவனமாக மாற்றும் முயற்சி நடந்துவருகிறது. உயர்கல்வி முழுவதும் தொழில்நுட்பக் கல்வியாகவும், பணம் உள்ளவர்களுக்கு மட்டுமானதாகவும் மாற, ஏழை மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவும் மாற இந்த ஆணையம் உருவாக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் உயர்கல்வி தனியார்மயப்படுத்தப்பட்டது. பி.ஜே.பி. தற்போது உயர்கல்வியை ஜியோ, ஜிண்டால், அசிம் ப்ரேம்ஜி முதலான கார்ப்பரேட்களுக்கு லாபம் தரும் துறையாக மாற்றி வருகிறது” என்றார். 

சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்த பிறகு, பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் மூலம், `இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படக் கூடாது’ என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதம், மத்திய அரசிடம் கோரிக்கையாக அளிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.


டிரெண்டிங் @ விகடன்