வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (26/07/2018)

கடைசி தொடர்பு:01:00 (26/07/2018)

கேரள எழுத்தாளரின் கையை வெட்டுவதாக மிரட்டுவதா? - தமிழக எழுத்தாளர்கள் கண்டனம்!

மீசா நாவல்

கேரள சாகித்ய அகாடமி விருதுபெற்ற மலையாள எழுத்தாளர் ஹரீஷின் கைகளை வெட்டுவதாக வந்துள்ள மிரட்டலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

’மாத்ருபூமி’ மலையாள வார இதழில் எஸ்.ஹரீஷ், மீசா எனும் நாவலை தொடராக எழுதிவந்தார். இதில் இந்துக்களின் மனம் புண்படும்படியாக எழுதப்பட்டுள்ளது என இந்துத்துவ அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நாவலை வெளியிட்டதை எதிர்த்து, கோழிக்கோட்டில் உள்ள மாத்ருபூமி தலைமை அலுவலகத்தை நோக்கி, பா.ஜ.க மகளிரணியினர் கடந்த சனியன்று பேரணி ஒன்றையும் நடத்தினர். அதற்கு முந்தைய நாளான வெள்ளியன்று கொச்சி அருகில் நடைபெற்ற புத்தக விழாவில், எதிர்ப்பாளர்கள் புகுந்து சூறையாடினர். முன்னதாக, கடந்த வாரம் மத்தியில் திருவனந்தபுரத்தில் சட்டமன்றத்தை நோக்கிய பேரணியும் நடத்தப்பட்டது. பிரச்னை பெரிதானதை அடுத்து, அந்த நாவலை வெளியிடாமல் நிறுத்திக்கொள்வதாக ஹரீஷ் அறிவித்தார். அந்த முடிவை திரும்பப்பெறுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து கேரள எழுத்தாளர் ஹரீஷுக்கு ஆதரவாக ஒரு குரல் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம், 'சமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல்மீது எழுப்பப்படும் விமர்சனங்களைப் பரிசீலித்து நேர்செய்துகொள்வதற்குப் பதிலாக, விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்துவருகிறது. கலை, இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து, அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களைத் திசைதிருப்பி, பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிடுவதற்கென்றே சங்பரிவாரம் பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களைக் களமிறக்கியுள்ளது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பண்பற்ற சகிப்பின்மை குண்டர்கள், விமர்சிப்பவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் அச்சுறுத்துவது, அவதூறு செய்வது, தாக்குவது, கொன்றொழிப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி பின்வாங்கச்செய்வது உட்பட்ட இழிவான வழிகளைக் கைக்கொண்டுள்ளனர். 

பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகுறித்த விவாதத்தில், கவிதையொன்றை மேற்கோள்காட்டியதற்காக ஊடகவியலாளர் கார்த்திக்கேயன், இவர்களது கடுமையான அவதூறுகளுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளார். ஆண்டாள் குறித்த கட்டுரையொன்றில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளுக்காக  கவியரசு வைரமுத்துவும்  இதேவிதமான நிலையை எதிர்கொள்ள நேரிட்டது. இப்போது, கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ஹரீஷுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் இதன் தொடர்ச்சிதான். 

எழுத்தாளர் அரீஷ்

மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளியிடப்பட்டுவந்த அவரது ‘மீசை’ என்ற நாவலின் உள்ளடக்கத்திற்காக, அவரது கைகளை வெட்டிவிடப்போவதாக ’யோக ஷேம சபா’ என்கிற அமைப்பினரால் மிரட்டப்பட்டுள்ளார். அவரையும் அவரின் குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் பல்வேறு அவதூறுகள், சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹரீஷ், தனது நாவலை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

அவரை இந்த முடிவுக்கு நெட்டித்தள்ளிய சகிப்பின்மைக் குண்டர்களுக்கு எதிராக நாடெங்குமிருந்து ஒலிக்கும் கண்டனத்தில், எங்கள் சங்கமும் இணைகிறது. மக்களாட்சி மாண்புகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்கும் போக்கை அனுமதிக்க முடியாதென்றும், எழுத்தாளர் ஹரீஷ் தனது படைப்பாக்கப் பணியைத் தொடர்வதற்குரிய பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அவரது கருத்துரிமைக்காகத் திரண்டுள்ள ஆதரவால் உத்வேகம்பெற்று, ஹரீஷ் அவரது எழுத்துப்பணியை முன்னிலும் காத்திரமாக தொடர வேண்டும்' என்று த.மு.எ.க.ச தெரிவித்துள்ளது.