வெளியிடப்பட்ட நேரம்: 21:31 (25/07/2018)

கடைசி தொடர்பு:21:33 (25/07/2018)

"சத்துணவு முட்டை டெண்டர் விளம்பரம் ஆன்லைனில் இல்லை'' - சட்டப் பஞ்சாயத்து இயக்கம்! 

``தமிழக அரசு, முட்டை டெண்டர் குறித்து இதுவரை ஆன்லைனில் விளம்பரம் செய்யவில்லை. செய்தித்தாள்களில் மட்டுமே கொடுத்திருக்கிறது. ஆனால், செய்தித்தாள்களில் ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. டெண்டர் விதிமுறைகள் குறித்து ஆன்லைனில் தேடி வருகிறோம்" - சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

த்துணவு முட்டைக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன், மீண்டும் முட்டைக் கொள்முதலுக்கான டெண்டர் கோரப்பட்டு, பின் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு தற்போது மீண்டும் டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு, ``இன்னும் ஆன்லைனில் வெளியாகவில்லை'' என்கிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாள்தோறும் மதிய உணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் 55 லட்சம் முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் பணிகளை, கடந்த சில ஆண்டுகளாகவே நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் செய்துவந்தது. இந்த நிறுவனம் முட்டைக் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. 
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற முட்டை சப்ளைக்கான டெண்டரை கிறிஸ்டி நிறுவனத்துக்கு நெருக்கமான ஸ்வர்ணபூமி மற்றும் நேச்சுரல் ஃபுட்ஸ் நிறுவனம் எடுத்தது. சந்தையில் முட்டையின் மதிப்பைவிடக் கூடுதல் விலைக்கு முட்டை சப்ளைக்கான ஒப்பந்தத்தை அரசு கொடுத்ததாக அப்போதே சர்ச்சை எழுந்தது.

இதற்கிடையே, கிறிஸ்டி நிறுவனம் அரசுத் துறையில் மேலும் சில டெண்டர்களில் கால்பதிக்க ஆரம்பித்ததையடுத்து, வருமானவரித் துறையின் பார்வை அந்த நிறுவனத்தின் மீது விழுந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது 10 கிலோ தங்கம், பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் குறித்த ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஆனாலும், ``சத்துணவு முட்டை டெண்டரில், எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. சட்டப்படிதான் டெண்டர் விடப்பட்டுள்ளது'' எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

சத்துணவு முட்டை சாப்பிடும் பள்ளிக் குழந்தைகள்

இந்த நிலையில், வரும் 31-ம் தேதியோடு  முட்டைக்கான டெண்டர் முடிவுக்கு வருவதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அன்று இந்தக் கல்வி ஆண்டில் முட்டை சப்ளை செய்வதற்கான டெண்டர் அறிவிப்பைச் சமூக நலத்துறை வெளியிட்டது. அந்த டெண்டர் ஆவணத்தில், ``நாள் ஒன்றுக்கு 50 லட்சம் அக்மார்க் முத்திரை கொண்ட முட்டைகள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த டெண்டரில் பங்கேற்பதற்கான சில விதிமுறைகளையும் சமூக நலத் துறையினர் அறிவித்திருந்தனர். அந்த விதிமுறைகள் கிறிஸ்டி நிறுவனத்துக்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், டெண்டர் முடிவு செய்யும் நாளான  ஜூலை 11-ம் தேதிக்கு முன்பாக, கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றதால் அந்த நிறுவனம் இந்த ஆண்டு முட்டை டெண்டர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், முட்டை டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் அளித்த நிறுவனங்களில் கிறிஸ்டி நிறுவனத்துக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. அவை தவிர, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு சொசைட்டி உள்ளிட்டவையும் டெண்டருக்கு விண்ணப்பித்திருந்தன. கிறிஸ்டி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று போர்க்கொடி துாக்கியதால் அதிகாரிகள் ஒவ்வொரு நிறுவனத்திடமும் ஒவ்வொரு காரணம் சொல்லி டெண்டரை நிறுத்திவிட்டனர். 

இந்த நிலையில், சத்துணவு முட்டைக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன், மீண்டும் முட்டைக் கொள்முதலுக்கான டெண்டர் கோரப்பட்டது. அதில், புகாருக்கு ஆளான நிறுவனங்களும் பங்கேற்றதால், யாருக்கும் டெண்டர் விடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் டெண்டர் குறிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு வருடத்துக்கான முட்டை விநியோகம் செய்ய விரும்புவர்கள், 30,000 ரூபாய் கட்டணம் செலுத்தி டெண்டர் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு டெண்டர் விடும் பணி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினரிடம் பேசினோம். ``தமிழக அரசு, முட்டை டெண்டர் குறித்து இதுவரை ஆன்லைனில் விளம்பரம் செய்யவில்லை. செய்தித்தாள்களில் மட்டுமே கொடுத்திருக்கிறது. ஆனால், செய்தித்தாள்களில் ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. டெண்டர் விதிமுறைகள் குறித்து ஆன்லைனில் தேடி வருகிறோம். விதிமுறைகள் கிடைத்தவுடன் விரிவாகப் பேசுகிறோம்'' என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்