குடிநீருக்கு மீட்டர் கட்டணம்! - மிரட்டும் கோவை மாநகராட்சி | coimbatore Municipal Commissioner speaks about suez water distribution

வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (26/07/2018)

கடைசி தொடர்பு:03:30 (26/07/2018)

குடிநீருக்கு மீட்டர் கட்டணம்! - மிரட்டும் கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' எனும் நிறுவனத்தின் மூலம் கோவை மாநகராட்சி துவங்க உள்ள '24 மணி நேர குடிநீர்சேவை திட்டம்' கோவை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில்,  மின்சார கட்டணம்போல் பயன்பாட்டின் அடிப்படையில் குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் அதற்கு தனியே மீட்டர் பொருத்தப்படும் என நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை பிரான்ஸ் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து எதிர்கட்சிகள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தத் திட்டம்  குறித்து விளக்கம் அளிப்பதற்காக நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ்  கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ``கோவை நகரில் தண்ணீர் விநியோகம் செய்வது சாவலாக இருக்கிறது. விநியோகப் பணிகளில் குறைபாடு இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த குறைபாடுகளையெல்லாம் சரிசெய்யவே 24 மணி நேர குடிநீர் திட்டத்தை செயல்படுத்துகிறோம். கோவை மாநகரின் 72 வார்டுகளுக்கு 24 மணிநேர குடிநீர் திட்டம் வழங்கும் செயல்படுத்த உள்ளோம். இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய அளவில் 24 மணிநேர குடிநீர் திட்டத்தை வேறெங்கும் செயல்படுத்தவில்லை. 

இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டிலேயே போடப்பட்டது. கோவை மாநகராட்சியில் 21 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்க சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஆனால், சூயஸ் நிறுவனத்திற்கு நாம் வழங்கும் தொகை அதைவிட குறைவாகவே இருக்கும். இதனால் மாநகராட்சியின் செலவினம் குறையும். மக்களுக்கும் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கும்.

இத்திட்டத்தில் அனைத்து தண்ணீர் இணைப்புகளும் மீட்டர் இணைப்புகளாக மாற்றப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் மினிமம் கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதைத் தாண்டி தண்ணீர் பயன்படுத்துபவர்களுக்கு  அவர்கள் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும். இத்திட்டத்தினால் தண்ணீரை சேமித்து வைக்க வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால், சேமித்து வைக்கப்படும் தண்ணீரிலிருந்து பரவும் நோய்கள் தடுக்கப்படும். அதேபோல தேவையான இடங்களில் பொதுக்குழாய்கள் இருக்கும். அதை துண்டிக்க மாட்டோம். 

அதுமட்டுமல்லாது குடிநீர் இணைப்பு, கட்டண நிர்ணயம் உள்ளிட்டவைகளின் அதிகாரம் அரசிடமே இருக்கும். வீட்டின் பரப்பளவிற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு ஏற்ப வசூலிக்கப்படும். கோடை காலங்களில் தண்ணீர் இருப்பிற்கு ஏற்ப விநியோகத்தில் ஏற்ற, இறக்கம் இருக்கும். தகுதியின் அடிப்படையிலேயே 'சூயஸ்' நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை  வழங்கப்பட்டுள்ளது" என்றார். 

அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் சீராக குடிநீர் விநியோகம் செய்துவரும் சூழலில் தண்ணீர் வளம்மிக்க கோவையில் குடிநீர் வழங்கல் உரிமையை  தனியாருக்கு  கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்காமல், ``24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கான தொழில்நுட்பங்களை அறிந்த பொறியாளர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இல்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close