ஏர் ஆம்புலன்ஸ் விவகாரம்: பன்னீர்செல்வம் தம்பிக்கு அன்று என்ன நடந்தது?

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பாதுகாப்பு அமைச்சர் சந்திக்க மறுத்த விவகாரத்தைவிட, அவசர சிகிச்சைக்காக அவரின் தம்பியை ராணுவத்துக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற விவகாரம் தான் தற்போது பூதாகரமாகியுள்ளது.

பன்னீர்செல்வம்
 

சாதாரண மக்களுக்கு இதுபோல் செய்ய முடியுமா. இதற்குப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஓ.பன்னீர்செல்வமும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரினார். 

பன்னீர் செல்வத்தின் மூன்றாவது தம்பி ஓ.பாலமுருகன் உடல் நலமில்லாமல் மதுரை அப்போலோவில் சேர்க்கப்பட்ட அன்று என்ன நடந்தது என்பதை மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். அதிகம் வெளியே அறிந்திடாதவர் மூன்றாவது தம்பி ஓ.பாலமுருகன். தொழில்துறைகளைக் கவனித்து வந்தவருக்குப் புற்றுநோய் தாக்கியதால், கடந்த ஜூலை 1 -ம் தேதி உணர்விழந்த நிலையில் மதுரை அப்போலோவில் சேர்க்கப்பட்டார். அன்று தருமபுரி கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பன்னீர்செல்வத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட, உடனே அப்போலோ மருத்துவர்களிடம் விசாரித்தார். நிலைமை மிகவும் சீரியஸாக உள்ளது. உடனே சிறப்பு சிகிச்சைக்காகச் சென்னை கொண்டு செல்ல வேண்டும். காரில் கொண்டு செல்ல முடியாது என்று தெரிவிக்க, உடனே சென்னை கொண்டு செல்ல தனியார் ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனங்களில் விசாரிக்கச் சொன்னார் பன்னீர் செல்வம். 

அதற்குத் தயாராக சூழல் இல்லாததால், உடனே அவசரக் காலத்தில் ராணுவத்துக்குப் பயன்படுத்தப்படும் ஏர் ஆம்புலன்ஸ் சேவை வேண்டுமெனப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தார். அதற்கு ஒத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன் பெங்களூரிலிருந்து பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான ஏர் ஆம்புலன்ஸை மதுரைக்குச் செல்ல உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஓ.பாலமுருகன் கார் மூலம் மதுரை விமான நிலையத்துக்குக் கொண்டு சென்று உடனே சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். யாருக்கும் தெரியாமல் நடந்த இந்தச் சம்பவம் இப்போது பன்னீர்செல்வம் வாயாலேயே வெளி வந்ததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த அரசாங்க பொறுப்பிலும் இல்லாத ஓ.பாலமுருகனுக்கு இந்த வசதியைச் செய்து கொடுக்கக் காரணம் என்னவென்று பலரும் கேட்டு வருகிறார்கள். இதை தி.மு.க மட்டுமில்லாமல், அ.தி.மு.க-விலிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், வெளியில் இருக்கும் டி.டி.வி ஆதரவாளர்களும் எழுப்பி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!