``டிவி மற்றும் அயர்ன் பாக்ஸில் தங்கம் கடத்தல்!" - கோவை விமான நிலையத்தில் பறிமுதல்

கோவையில் பிடிப்பட்ட தங்கம்

டிவி மற்றும் அயர்ன் பாக்ஸில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.   

கொழும்புலிருந்து  இன்று கோவைக்கு வந்த 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானத்தில் வந்த பயணிகளிடம்  கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படியான உடல்மொழியோடு வெளிவந்த இரு பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினார்கள். ஆரம்பத்தில் அவர்களிடத்தில் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும், அதிகாரிகளுக்குச் சந்தேகம் தீரவில்லை. 

இந்நிலையில், அவர்கள் கொண்டு வந்திருந்த அயர்ன் பாக்ஸ் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி ஆகிய எலெக்ட்ரானிக்  பொருள்களை ஆய்வுக்குட்படுத்தினார்கள். அதிகாரிகள் சந்தேகம் தப்பவில்லை. அந்த இருவரும் அயர்ன்பாக்ஸ் மற்றும் டிவி பெட்டிக்குள் தங்கக்கட்டிகளை பதுக்கியிருப்பது அம்பலமானது. வட்டம் மற்றும் சதுர வடிவில் இருந்த 20  தங்கக் கட்டிகள் 1,100 கிராம் எடை இருந்தது.

தங்கத்தைப் பதுக்கிக் கொண்டு வந்த பயணிகளான கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முஹம்மது அலீப் மற்றும் சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த அன்சாரி ஆகிய இருவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்துடன்  அயர்ன் பாக்ஸ் மற்றும் டிவி பெட்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்வதற்கான வரம்பு இல்லாததால் அவர்கள் இருவரையும் கைது செய்யாமல் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!