வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (26/07/2018)

கடைசி தொடர்பு:08:08 (26/07/2018)

குளத்தில் தனித்தனியாக மிதந்த பெண்ணின் உடல் பாகங்கள் - கோவையில் பரபரப்பு!

மிதந்து வந்த உடல் பாகம்

கோவை செல்வாம்பதி குளத்தில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக மிதந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கோவையை அடுத்து இருக்கிறது பனமரத்தூர். அதன் அருகே உள்ள செல்வாம்பதி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோவையில் பெய்துவரும் தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக குளம் முழுவதும் நீர் நிறைந்துள்ளது. இந்நிலையில், இன்று அந்தக் குளத்தின் ஓர் ஓரத்தில் தலை, கைகள் மற்றும் வயிற்றின் கீழ்ப் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் உடல் மிதப்பதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் மிரண்டுபோனார்கள். உடனடியாக அதுகுறித்து கோவை செல்வபுரம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் குளத்து நீரில் மிதந்த பெண்ணின் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக மீட்டக் காட்சி அப்பகுதி மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. மீட்கப்பட்ட உடல்பாகங்களை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் அந்தப் பெண்  சடலத்தின் தலை உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தலை இல்லாததால் இப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட பெண் யார் என்பது குறித்து தெரியவில்லை. அந்தப் பெண் யார் என்பது தெரிந்தால்தான் இந்தக் கொலையின் கொடூரப் பின்னணி தெரியவரும் என்கின்றனர் போலீஸார்