வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (26/07/2018)

கடைசி தொடர்பு:07:20 (26/07/2018)

திருநங்கைகளுக்கு கைகொடுக்கும் கோவை போலீஸ்!

கோவையில், திருநங்கைகளைத் தொழில் முனைவோராக்க, போலீஸார் கைகொடுத்து உதவி வருகின்றனர்.

போலீஸ் திருநங்கைகள்

கோவை மாநகர காவல்துறை, தெற்கு ரோட்டரி கிளப்புடன் இணைந்து, திருநங்கைகளுக்குத் தொழில் தொடங்கி உதவி செய்து வருகின்றனர். இதற்கான, நிகழ்ச்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில், 60 திருநங்கைகள் பயன் அடையும் வகையில், ரூ.3 லட்சம் மதிப்பில், அவர்களுக்குத் தையல் இயந்திரங்கள், தள்ளு வண்டிகள் மற்றும் இட்லி பாத்திரங்களை, கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா வழங்கினார்.

ஏற்கெனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவை போலீஸ் சார்பில், 4 திருநங்கைகளுக்கு ஆட்டோ ரிக்‌ஷா வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக, திருநங்கைகளுக்கு, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் டிராஃபிக் வார்டன் வேலை வழங்க, கோவை போலீஸ் முயற்சி செய்து வருகிறது. மேலும், ரோட்டரி கிளப் மூலம், வருகின்ற நவம்பர் மாதம் 100 திருநங்கைகளுக்கு, சொந்தமாகத் தொழில் தொடங்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கை

இந்த நிகழ்ச்சியில், துணை கமிஷனர் லட்சுமி, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டனர்.