வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (26/07/2018)

கடைசி தொடர்பு:07:45 (26/07/2018)

பி.எஸ்.என்.எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு உத்தரவு ரத்து!

பி.எஸ்.என்.எல் இணைப்பு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

பி.எஸ்.என்.எல் இணைப்பு தொடர்பான வழக்கில் மீண்டும் விசாரணை

கடந்த 2004-07-ம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்த தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல் இணைப்புகளைத் தவறான வழியில் பயன்படுத்தியதால், அந்நிறுவனத்துக்கு இழப்பு  ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டு சி.பி.ஐ விசாரணை நடைபெற்றது.  சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனக் கூறி தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். 
 
இந்நிலையில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய  இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சி.பி.ஐ. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அதில், ‘வழக்கின் தொடக்க நிலையிலே குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் வழக்குத் தொடர்வதற்கான முகாந்திரம் உள்ளது. அதனால் 7 பேரையும் விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுகிறேன் ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.