``உண்டியல் காசுல காங்கேயம் காளைதான் வேணும்னு அடம்பிடிச்சு வாங்கினேன்!” - ஈரோடு சிறுவனின் ஆசை | 13 year old boy used his piggy bank money to buy bull

வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (26/07/2018)

கடைசி தொடர்பு:10:31 (26/07/2018)

``உண்டியல் காசுல காங்கேயம் காளைதான் வேணும்னு அடம்பிடிச்சு வாங்கினேன்!” - ஈரோடு சிறுவனின் ஆசை

சிறுவனுக்கு நாட்டு மாடு மேல் உள்ள காதலையறிந்து வியப்படைந்த மாட்டுச் சந்தை உரிமையாளர் தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகத் தெரிவித்திருக்கிறார்.

``உண்டியல் காசுல காங்கேயம் காளைதான் வேணும்னு அடம்பிடிச்சு வாங்கினேன்!” - ஈரோடு சிறுவனின் ஆசை

இந்தக் காலத்துச் சிறுவர்களுக்கு செல்போன், வீடியோ கேம்ஸ், எலெக்ட்ரானிக் பொம்மைகள் இருந்தால் போதும். உலகத்தையே மறந்து விடுவார்கள். அந்த அளவுக்கு இயந்திரங்களுடன் இந்தத் தலைமுறை குழந்தைகள் தீராக்காதல் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மத்தியில், ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சிறுவயதிலிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணத்தில் காங்கேயம் இன நாட்டு மாடு ஒன்றை வாங்கி அசத்தியிருக்கிறான்.

காளை

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த செட்டித்தோட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - திலகவதி தம்பதியரின் ஒரே மகன் பொன் சிவவேல். சிவகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, விவசாயத்தின் மீதும், கால்நடைகளின் மீதும் இந்தச் சிறுவனுக்கு அலாதியான ஆர்வம் இருந்திருக்கிறது. சிறு வயது முதல் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலர் கொடுத்த பணத்தை உண்டியலில் சேர்த்து வைத்திருக்கிறான். ஒருநாள் உண்டியலை உடைக்க அதில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கிறது. அந்தப் பணத்தில் தனக்கு நாட்டு மாடு ஒன்றை வாங்கித் தர வேண்டுமென வீட்டில் அடம் பிடித்திருக்கிறான். `இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு மாடு வாங்க முடியாது’ எனப் பெற்றோர் சொல்ல, `கன்றுக்குட்டியாவது வாங்கிக் கொடுங்கள்’ என மறுபடியும் பிடிவாதம் பிடித்திருக்கிறான். பையனுடைய ஆர்வத்தைப் பார்த்து அவனுடைய பெற்றோர்கள் பழையகோட்டை மாட்டுச் சந்தைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். கன்றுக்குட்டியின் ஆரம்ப விலையே 37 ஆயிரம் எனச் சொல்ல, ஏமாற்றத்தோடு சிறுவன் வீடு திரும்பியிருக்கிறான். பையனுடைய சோக முகத்தைப் பார்த்த பெற்றோர்கள், மாட்டுச்சந்தை நடத்தும் உரிமையாளரிடம் பையனுடைய ஆசைகளைச் சொல்லி,`குறைந்த விலையில் ஏதாவது காங்கேயம் காளைக் கன்று கிடைத்தால் தெரியப்படுத்துங்கள்’ என்றிருக்கின்றனர்.

பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவனுக்கு நாட்டு மாடு மேல் உள்ள காதலையறிந்து வியப்படைந்த மாட்டுச்சந்தை உரிமையாளர், இந்தச் செய்தியை தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகத் தெரிவித்திருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுவனுக்குக் காங்கேயம் இனக் காளைக் கன்றினை வாங்குவதற்கு மீதமுள்ள பணத்தைக் கொடுத்து உதவ, சிறுவன் உற்சாகத்துடன் காளைக் கன்றினை வீட்டுக்கு ஓட்டி வந்திருக்கிறான். இந்தத் தகவலையறிந்ததும், சிறுவன் பொன் சிவவேலை அவனுடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

காளை

``என்னோட தாத்தா ஓர்  இயற்கை விவசாயி. அதனால், வீடுல எப்பவுமே பஞ்சகாவ்யா, இயற்கை உரம் என்ற வார்த்தைகள் எல்லாம் கேக்கும். சாதாரண மாட்டை விட, நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய கோமியம், சாணத்துல இருந்து தயாரிக்கிற இயற்கை உரம் தரமாக இருக்கும்னு சொல்லுவாங்க. அதுல இருந்து எனக்கு என்னை அறியாமலேயே நாட்டு மாடு மேல ஒரு ஆர்வம் வந்துடுச்சி. எங்க ஊர்ல நிறைய பேர் நாட்டு மாடு வாங்குனாங்க. அதைப் பார்த்து நாமளும் நாட்டு மாடு வாங்கலாம்னு வீட்டுல சொன்னேன். `தண்ணி இல்லாததால விவசாயமே பெருசாப் பண்ண முடியலை. இப்போதைக்குக் காசு இல்லை. அப்புறமா வாங்கிக்கலாம்’ன்னு சொல்லிட்டாங்க. ஒருநாள் நான் சேர்த்து வெச்சிருந்த உண்டியலை உடைச்சி, 19 ஆயிரத்தை அம்மாகிட்ட கொண்டுபோய், `இந்தக் காசுல எனக்கு நாட்டு மாடு வாங்கிக் கொடுங்கன்னு’ சொன்னேன். அந்தக் காசுக்கு காளைக் கன்னுக்குட்டி கூட கிடைக்கிலை. அப்புறமா, அந்த மாட்டுச் சந்தை நடத்துற அங்கிள்தான் அவங்களோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி, எனக்குக் காங்கேயம் காளைக் கன்று வாங்க உதவி செஞ்சார். மாடு வாங்கிட்டு வந்த அன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. அந்தக் கன்னுக்குட்டிக்கு `சாய் விஜயலட்சுமி’ன்னு பேர் வெச்சிருக்கேன். நான் பேர் சொல்லிக் கூப்பிட்டா அது தலையைத் தூக்கிப் பார்க்கும். தினமும் ஸ்கூல் விட்டதும், கன்னுக்குட்டி கூட கொஞ்ச நேரம் விளையாடிக்கிட்டுதான் வீட்டுக்குள்ளயே போவேன். அதுக்கு நிறைய தீணி போட்டு சீக்கிரமா, பெரிய மாடா ஆக்கணும்” என்றான்.

காளை

பொன் சிவவேல் அம்மாவிடம் பேசினோம். ``37 ஆயிரத்துக்கும் கம்மியா கன்னுக்குட்டி கிடைக்கலைன்னு அன்னைக்கு மாடு வாங்க முடியாம வீட்டுக்கு வந்துட்டோம். அன்னைக்கு ராத்திரி முழுக்க சோகமா இருந்தான். ஏற்கெனவே அவன் சேர்த்து வெச்சிருந்த காசுல 4 ஆயிரத்துக்கு ஒரு வெள்ளாடு வாங்கியிருந்தான். அது இப்போ 2 குட்டி போட்டுருக்கு. `இந்த ஆட்டை வித்தாவது எனக்கு மாடு வாங்கித் தாம்மா’ன்னு சொன்னான். அவங்க தாத்தா வீட்டுக்குப் போறப்ப, பக்கத்து வீட்டுல நாட்டு மாடு இருக்கும். அதையே ஏக்கமா நின்னு பார்த்துக்கிட்டு இருப்பான். சரி சும்மாதான் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கான்னு நெனச்சோம். சின்ன வயசுல இருந்து, நாங்க ஏதாவது வாங்கிக் கொடுத்தாலும் வேணாம்னுதான் சொல்லுவான். ஆனா, ஒரு மாட்டுக்காக அவன் இவ்வளவு சோகமாக இருந்தது எங்களுக்கே கஷ்டமாக இருந்துச்சி. கன்னுக்குட்டி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவன் எங்களை கண்டுக்கிறதே இல்லை. இந்தச் சின்ன வயசுல என் புள்ளைக்கு ஒரு வாயில்லாத ஜீவன் மேலயும், இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் இருக்குன்னு சொல்றப்பவும் எனக்கே ஆச்சர்யமா இருக்கு” எனப் பூரித்தார்.


டிரெண்டிங் @ விகடன்