மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார்... கோவை விடுதி உரிமையாளர் ஆலங்குளத்தில் சடலமாக மீட்பு

``வார்டன் மூலம் பெண்களைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் சிக்கி காவல்துறையால் தேடப்பட்டு வந்த மகளிர் விடுதி உரிமையாளர், நெல்லை ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

லேடிஸ் ஹாஸ்டல் ஜெகநாதன்

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் செயல்பட்டு வருகிறது தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதி. அதன் உரிமையாளரான ஜெகநாதன் சிலதினங்களுக்கு முன்பு விடுதி வார்டன் புனிதா மூலம் அங்கு தங்கியிருக்கும் சில கல்லூரிப் பெண்களைத் தவறாக வழி நடத்த முயன்றதாக சர்ச்சைக்குள் சிக்கினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் அந்த விடுதியில் தங்கியிருந்த சில கல்லூரி மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற புனிதா, அந்த மாணவிகளுக்குக் கட்டாய மதுவிருந்து அளித்ததாக கூறப்பட்டது.  மாணவிகள் மது மயக்கத்தில் இருந்தபோது, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் வாட்ஸ்அப் கால் வழியாக தவறான கோலத்தில் தோன்றியதாகவும். இதற்கு வார்டன் புனிதா உதவியதாகவும் விடுதியில் உள்ள சில பெண்கள் மூலம் குற்றச்சாட்டு எழுந்து கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் புகார் வெளியான சில மணி நேரங்களில் விடுதிக் காப்பாளர் புனிதாவும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனும் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டனர். கோவை பீளேமேடு காவல்துறையினர் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை நெல்லை ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் போலீஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் விசாரணைக்குப் பின்னரே முழுவிவரம் தெரியவரும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். ஜெகநாதன் குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவில்லை. விவகாரம் இன்னும் விபரீதமாவதற்குள் புனிதாவை கைது செய்ய வேண்டிய நிர்பந்தம் போலீஸுக்கு  ஏற்பட்டுள்ளதால். புனிதாவை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறது போலீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!