பெரியாருக்கு விழா எடுக்குமா சேலம் பெரியார் பல்கலைக்கழகம்? | Salem Periyar University Will take ceremony for Periyar?

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (26/07/2018)

கடைசி தொடர்பு:11:40 (26/07/2018)

பெரியாருக்கு விழா எடுக்குமா சேலம் பெரியார் பல்கலைக்கழகம்?

பெரியார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பெரியார் பிறந்த நாள், நினைவு நாள் விழா சிறப்பாக கொண்டப்பட்டு வந்தது. ஆனால், சில ஆண்டுகளாக இந்த விழாக்கள் கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டிலிருந்து இவ்விரு விழாக்களும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்கள் பேராசிரியர்கள்.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ``சாதி, மத பேதத்தை ஒழித்து, சமூக நீதியை நிலை நாட்டி, பகுத்தறிவைப் புகட்டிய தந்தைப் பெரியார் பெயரில் செயல்பட்டு வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகள் பெரியாரின் பிறந்த தினம், நினைவு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே 15,16,17 ஆகிய மூன்று நாள்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து தலைசிறந்த கல்வியாளர்கள், கவிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தங்கள் கருத்துகளை வழங்குவார்கள். பெரியாரின் வாழ்க்கை வரலாறு நாடகமும் அரங்கேறும்.

முப்பெரும் விழாவின் இறுதி நாளான பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி, மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா நடைபெறும். இதில் ஆளுநர் கலந்துகொண்டு விழாவை மேலும் சிறப்படையச் செய்வார். இந்த செப்டம்பர் 17 தினத்தை ஆளுநர் கலந்துகொள்ளும் நிலையான தினமாக ஆளுநர் மாளிகை ஒதுக்கி வைக்கும். அதன் பிறகு முப்பெரும் விழாவை முத்தமிழ் விழாவாக மாற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போதும் 17-ம் தேதி ஆளுநர் கலந்துகொள்ளும் தினமாகவே இருந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லாததால் பெரியார் பிறந்த தினம்,  நினைவு தினம் கொண்டாடவில்லை.  இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக குழந்தைவேல் இருக்கிறார். இந்த ஆண்டிலிருந்து முன்பைப் போலவே விழா சீரும் சிறப்புமாக நடைபெறும் என மாணவர்களும், பேராசிரியர்களும் எதிர்பார்த்தோம். ஆனால், இந்த விழாக்களுக்கு 1 1/2 மாதமே இருக்கும் நிலையில், கலையரங்கம் புதுப்பிக்கும் பணி தொடங்கி இருக்கிறார்கள். இது 3 மாதங்கள் நடைபெறும். இன்று வரை விழாவுக்கான எந்த ஒரு பூர்வாங்கப் பணிகளும் நடைபெறவில்லை. அதனால் இந்த ஆண்டும் பெரியார் பிறந்த தினம் கொண்டாடுவது சந்தேகமாக இருக்கிறது'' என்று சோகமாக தெரிவித்தார்கள்.  

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குழந்தைவேல், ``இன்னும் 1 1/2 மாதம் இருக்கிறது. நிச்சயம் பெரியார் பிறந்த தின விழாவும், பட்டமளிப்பு விழாவும் நடைபெறும். சம்பள உயர்வு பற்றி என்னிடம் பேசும் பேராசிரியர்கள் இதை என்னிடம் கேட்க வேண்டியது தானே ஏன் பத்திரிகைகளில் பேசுகிறார்கள். உங்களிடம் பேசுபவர்களை என்னிடம் அனுப்பி வையுங்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க