வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (26/07/2018)

கடைசி தொடர்பு:18:49 (26/07/2018)

வழிகாட்டியாக இருந்த கணவரின் நண்பர்... தனக்குத்தானே பிரசவம் பார்த்த திருப்பூர் பெண்ணுக்கு நடந்த துயரம்

இயற்கை மருத்துவத்தின் மீதுள்ள ஆர்வத்தால் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்த தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்துபோன சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கிருத்திகா

திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார் பனியன் நிறுவன ஊழியர் கார்த்திகேயன். இவரின் மனைவி கிருத்திகா அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்துவந்த இவர்களுக்கு ஏற்கெனவே 4 வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது. இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கர்ப்பமானார். அப்போது கார்த்திகேயனின் நண்பரான பிரவீன் மற்றும் அவரின் மனைவி லாவண்யா ஆகியோர் தங்களது பெண் குழந்தையை வீட்டிலேயே இயற்கையான முறையில் பிரசவம் பார்த்துப் பெற்றெடுத்த கதையை அவர்களிடம் பகிர்ந்திருக்கிறார்கள். பொதுவாகவே கார்த்திகேயன் - கிருத்திகா தம்பதியர் ஆங்கில மருத்துவத்தைவிட, இயற்கை மருத்துவத்தில் அதிக ஆர்வம் மிக்கவர்கள் என்பதால், தங்களது குழந்தையும் வீட்டிலேயே இயற்கையான முறையில் பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.

இதற்கு வீட்டிலுள்ள மற்றவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தபோதும், தம்பதியர் இருவரும் விடாப்பிடியாக
ஆர்வத்தோடு இருந்ததால், பின்னர் அவர்களின் போக்கிலேயே விட்டுள்ளனர். வீட்டிலேயே சுயமாக பிரசவம் பார்த்து எந்தவித சிக்கலும் இல்லாமல் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்த தம்பதியர், அதுதொடர்பாக யூடியூப் வலைதளத்தில் பல்வேறு வீடியோக்களை தொடர்ச்சியாக பார்த்து வந்துள்ளனர்.

கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன்

இந்நிலையில், கடந்த 22 -ம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது உடனடியாக கார்த்திகேயன் தனது நண்பரான பிரவீன் - லாவண்யா தம்பதியரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு கார்த்திகேயன், அவரின் தாயார் காந்திமதி மற்றும் பிரவீன் - லாவண்யா தம்பதி சேர்ந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதில் கிருத்திகாவுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், கிருத்திகாவின் வயிற்றில் இருந்து நஞ்சுக்கொடி வெளியே வராமல்போனதால், அடுத்த சில நிமிடங்களில் கிருத்திகா மயக்கமடைந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு,
திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துபோனார்.

கிருத்திகாவின் மரணத்தை நம்ப முடியாமல் திக்கற்று நின்றிருக்கிறது குடும்பம். பின்னர் அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்து இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, எரியூட்டுவதற்காக மின்மயானம் சென்றுள்ளனர். ஆனால், கிருத்திகாவின் மரணம் குறித்த மருத்துவரின் கடிதம் இல்லாததால், மின் மயான நிர்வாகிகள் கிருத்திகாவின் உடலை எரியூட்டுவதற்கு அனுமதி மறுத்துள்ளனர். பின்னர் காவல்துறையில் பேசி முறையான நடைமுறைகளை முடித்து, பிரேதப் பரிசோதனையும் செய்யப்பட்ட பிறகே இறுதியாக கிருத்திகாவின் உடல் எரியூட்டப்பட்டிருக்கிறது.

நம் முன்னோர்கள் காலந்தொட்டே, வீட்டிலேயே இயற்கை முறையிலான பிரசவம் பார்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், முறையான அனுபவம் இல்லாமல் இணையத்தைப் பார்த்து விபரீதமாக முயற்சி செய்ததால், ஒரு உயிர் மரணித்திருக்கிறது.