`கண்துடைப்புக்காகவே விசாரணை ஆணையம் அமைப்பு'- உயர்நீதிமன்றம் அதிருப்தி

``ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்'' என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தில் முறைகேடுகள் இருப்பதாக 2015-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்க தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் கருணாநிதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, `ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெறும் கண்துடைப்புக்காகவே இதுபோன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.

இதுபோன்ற ஆணையத்துக்காக பொதுமக்களின் பணத்தை வீணடிக்கக் கூடாது. இதுவரை அரசால் எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது. பொது மக்களின் கவனத்தை திசைத் திருப்பவே இதுபோன்ற ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த ஆணையங்கள் தரும் அறிக்கைக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த ஆணையங்கள் விசாரணையை முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!