ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைப்பதுபோல் வைத்து கைவரிசை காட்டிய ஊழியர்கள்!

ஏடிஎம் திருடர்கள்

ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதில் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர்கள்  இருவரை கோவை புலியகுளம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி நகரில் ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்  கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள 250 ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் கடந்த ஜூன் 3 முதல் ஜூலை 3-ம் தேதி வரை நிரப்பப்பட்ட தொகையில் ரூபாய் 22 லட்சம் குறைந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் எம்.ஜெகதீஷ் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் மையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ``அந்தப் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றும் ஒண்டிபுதூரை அடுத்துள்ள பட்டணம் சாலை பாரதி நகரைச் சேர்ந்த சாஜூதீன், கோவை ராமநாதபுரம் ராமசாமி நகரைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கியதாஸ் என்கிற தாஸ், அக்பர் அலி ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த மூவரும்தான் அந்த ஏ.டி.எம்மில் பணம் நிரப்பிவிட்டுச் சென்றுள்ளனர். 

சற்று நேரத்தில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனத்தை வேறு எங்கோ நிறுத்திவிட்டு இரு சக்கர வாகனங்களில் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை பழுது பார்ப்பதுபோல் நடித்து பணத்தை திருடியுள்ளனர் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளார்கள். இதையடுத்து, சாஜூதீன், ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அக்பர் அலியைத் தேடி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!