`இந்த ஆட்சியில் கமிஷன் வேலைதான் சரியா நடக்குது' - தூக்கில் தொங்கும் போராட்டத்தில் வேதனை

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து மரத்தில் தூக்கில் தொங்கும் நூதனப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் மக்கள் சேவை இயக்கத்தினர். ``இந்த ஆட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ கமிஷன் வாங்கும் வேலை மட்டும் சரியாக நடக்கிறது'' என்று காட்டமாக கூறினர்.

போராட்டம் நடத்திய மக்கள் சேவை இயக்கத்தினர்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள மின் கம்பத்தில் உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து மக்கள் சேவை இயக்கத்தினர் தூக்குக்கயிற்றில் தொங்கி மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். 

போராட்டத்தில் ஈடுபட்ட தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம். ``அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர்- திருமழபாடி பிரிவு சாலையில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. இதுவரையில் இந்த இடத்தில் ஐந்து பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். நகைக்கு ஆசைப்பட்டு மனித உயிர்களைக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காகக் கடந்த ஒரு வருடமாக அதிகாரிகள் முதல் ஆட்சியர் வரை மனு கொடுத்துவிட்டோம். இன்று வரையிலும் நடவடிக்கை இல்லை. அதேபோல் கடந்த வாரம் எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மின்சார வாரியத்தில் நேரில் சென்று புகார் கொடுத்திருக்கிறார்.

அதற்கு அவர்கள், ``நீ எத்தனை முறை மனு கொடுத்தாலும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் வேலை நடக்கும்" என்று அசிங்கமாகப் பேசியிருக்கிறார். இவர் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். இது மக்களுக்கான அரசுதானா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த ஆட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ கமிஷன் வாங்கும் வேலை மட்டும் சரியாக நடக்கிறது. செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கும் அதிகாரிகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியரைச் சிறைப்பிடித்து போராட்டம் நடத்துவோம்" என எச்சரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!