வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (26/07/2018)

கடைசி தொடர்பு:13:32 (26/07/2018)

`என் வாழ்க்கை இப்படி திசைமாறி விட்டதே?'- தற்கொலைக்கு முன் கண்ணீர்விட்ட ஜெகநாதன்

கோவையில் மகளிர் விடுதி நடத்தி பாலியல் புகாரில் சிக்கி, போலீஸாரால் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விடுதி உரிமையாளர் ஜெகநாதன்

கோவையில் பீளமேடு பாலரெங்கநாதபுரத்தில் ஜெகநாதன் என்பவர் இரு பெண்கள் விடுதி நடத்தி வந்தார். இதில் 500-க்கும் அதிகமான பெண்கள் தங்கி இருந்துள்ளனர். இந்த விடுதியின் காப்பாளராக புனிதா என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த 4 பெண்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்ற புனிதா, அவர்களைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததுடன், விடுதி உரிமையாளருடன் இருக்குமாறு வற்புறுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்தது.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததால், விடுதி உரிமையாளரான ஜெகநாதன், காப்பாளரான புனிதா ஆகிய இருவர் மீதும் பீளமேடு போலீஸார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, மும்பை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளன. 

இந்த நிலையில், விடுதியின் உரிமையாளரான ஜெகநாதன், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்தார். அவரது உடலை இன்று அதிகாலை மீட்ட ஆலங்குளம் போலீஸார், உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோவையைச் சேர்ந்த ஜெகநாதன் கடந்த 3 நாள்களாக நெல்லை மாவட்டத்தில் குற்றாலத்தில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அவருக்கு அங்குள்ள வழக்கறிஞர் ஒருவர் உதவி செய்திருக்கிறார். 

 தற்கொலை செய்துக்கொண்ட விடுதி உரிமையாளர் ஜெகநாதன்

போலீஸாரின் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்ததால் ஜெகநாதனை அந்த வழக்கறிஞர் தனக்குத் தெரிந்த ஒருவருடன் சென்று சிவலார்குளம் கிராமத்தில் தங்கியிருக்குமாறு தெரிவித்துள்ளார். சிவலார்குளத்தைச் சேர்ந்த சந்தனமாரியப்பன் என்ற ஆப்பவாயன் மீது ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் சிவலார்குளம் கிராமப் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பதுங்கி இருந்துள்ளார். வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அவருடன் ஜெகநாதனும் தங்கி இருந்திருக்கிறார். நேற்று இரவு இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது தனது வாழ்க்கை இப்படி திசைமாறி விட்டதே என ஜெகநாதன் அழுது புலம்பி இருக்கிறார். தனக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் காட்டுப் பகுதியில் நடந்து சென்ற அவர் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். 

இது பற்றி தகவல் சந்தனமாரியப்பன் என்ற ஆப்பவாயன் மூலம் வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மூலமாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. ஜெகநாதன் குடிபோதையில் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தனமாரியப்பனை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.